உள்படம்: கொலையான முத்துவேலு 
க்ரைம்

நண்பருக்காக ரவுடியின் தலையைத் துண்டித்து காவல்நிலையத்துக்கு கொண்டு சென்றவர் கைது: மதுரையில் பயங்கரம்

என்.சன்னாசி

மதுரை அருகே, தனது நண்பருக்கு நேர்ந்த அவமானத்தைத் துடைக்க ரவுடியின் தலையைத் துண்டித்து காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றவர் கைது செய்யப்பட்டார்.

மதுரை அலங்காநல்லூரைச் சேர்ந்தவர் முத்துவேலு. இவர் மீது காவல்நிலையத்தில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இந்நிலையில், நேற்றிரவு முத்துவேலு தலை துண்டித்து படுகொலை செய்யப்பட்டார். இவரைக் கொலை செய்த நாகராஜன் துண்டித்த தலையை காவல் நிலையத்துக்குக் கொண்டு சென்று அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.

நடந்தது என்ன?

அலங்காநல்லூர் காமராஜர் தெருவைச் சேர்ந்தவர் முத்துவேலு (31). இவர் பன்றி இறைச்சி வியாபாரம் செய்துவந்துள்ளார். இவர் மீது கஞ்சா விற்பனை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. எப்போதும் மது, நண்பர்கள் என இருக்கும் முத்துவேலுவின் வட்டாரத்தில் அதே ஊரைச் சேர்ந்த நாகராஜன் என்பவர் இணைந்துள்ளார்.

நாகராஜன் - முத்துவேலு நட்பு நன்றாகவே சென்று கொண்டிருந்த நிலையில் நாகராஜனின் மற்றொரு நண்பர் முத்துக்குமாரின் உறவுக்கார பெண் ஒருவரை முத்துவேலு கடத்தி 4 நாட்கள் அடைத்துவைத்து பாலியல் துன்புறுத்தல் அளித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் நட்பில் விரிசல் ஏற்பட்டது. முத்துவேலு மீது நாகராஜனும் முத்துக்குமாரும் கடும் ஆத்திரத்தில் இருந்துள்ளனர். நண்பர் முத்துக்குமாரின் வாட்டத்தைப் பொறுக்க இயலாமல் நண்பருக்காக முத்துவேலுவைக் கொலை செய்யத் துணிந்துள்ளார் நாகராஜன்.

இதற்காகத் திட்டமிட்டு நேற்று மாலை அலங்காநல்லூர் காவலர் தெருவில் உள்ள ஓர் ஒதுக்குப்புறமான பகுதிக்கு அழைத்துச் சென்று அவருடன் சேர்ந்து மது அருந்தியுள்ளார். முத்துவேலுவை அதிகமாகக் குடிக்க வைத்த நிலையில் அவரின் தலையைத் துண்டித்து கொலை செய்துள்ளார்.

பின்னர், ரத்தக் கறைகளுடன் அலங்காநல்லூர் காவல் நிலையத்துக்குச் சென்ற நகாராஜன், முத்துவேலுவை வெட்டிக் கொலை செய்ததாகவும், அவரின் தலையை காவல் நிலையம் அருகே முட்முதருக்குள் வைத்திருப்பதாகவும் தகவல் தெரிவித்தார்.

அதிர்ச்சி அடைந்த போலீஸார், அவர் குறிப்பிட்ட இடத்தில் ஆய்வு செய்தனர். அங்கு முத்துவேலுவின் தலையை மீட்டனர். பின்னர் உடல் பகுதியையும் மீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

நாகராஜனிடம் போலீஸார் நடத்திய விசாரணையில், நண்பர் முத்துக்குமாருக்காக இந்தக் கொலையை நாகராஜன் செய்திருப்பது தெரிந்தது.
இதைத்தொடர்ந்து அவரை போலீஸார் கைது செய்தனர்.

முத்துக்குமாரையும் தேடி வருகின்றனர். தலையைத் துண்டித்து காவல் நிலையம் நோக்கி அதை தூக்கிச் சென்ற கொடூர சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அலங்காநல்லூர் போலீஸார் இந்த வழக்கு தொடர்பாக தீவிரமாக விசாரிக்கின்றனர்.

SCROLL FOR NEXT