சேலத்தில் அடுத்தடுத்த மூன்று நாளில் சாலையோரம் படுத்துறங்கும் முதியவர்களின் தலையில் கல்லைப் போட்டு கொலை செய்த கொலையாளியை போலீஸார் கைது செய்துள்ளனர்.
சேலத்தில் பிப்ரவரி 1-ம் தேதி ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள நிழற்குடை பகுதியில் படுத்துறங்கிய நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரத்தைச் சேர்ந்த பெரியசாமி என்பர் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். அதற்கு அடுத்த நாளான பிப்ரவரி 2-ம் தேதி, சூரமங்கலம், திருவாகவுண்டனூர் பை-பாஸ் சாலையில் தனியார் மருத்துவமனை அருகே சாலை ஓரமாக படுத்திருந்த வடமாநில முதியவர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். பிப்ரவரி 3-ம் தேதி சேலம் பழைய பேருந்து நிலையம் பகுதியில் உள்ள வணிக வளாகத்தில் உள்ள கடை வாசலில் படுத்திருந்த பொன்னம்மாபேட்டை, சடகோபன் தெருவைச் சேர்ந்த பழ வியாபாரி அங்கமுத்து (85) என்பவர் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார்.
மூவர் தலையின் மீதும் மர்ம நபர் கல்லைப் போட்டுக் கொடூரமாகக் கொலை செய்த நிலையில், அந்தக் கொலைகாரனை போலீஸார் தேடி வந்தனர். அடுத்தடுத்த மூன்று நாட்களில் இந்தக் கொலை நடந்த பகுதிகளில் இருந்த சிசிடிவி கேமரா பதிவு மூலம், கொலையாளியைக் கண்டறியும் முயற்சியில் போலீஸார் ஈடுபட்டனர்.
திருவாகவுண்டனூர் பகுதியில் முதியவரைக் கொலை செய்த நபரின் உருவம் சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது. சந்தேகத்துக்கு இடமான நபரை போலீஸார் பிடித்து, சிசிடிவி கேமராவில் பதிவான உருவத்துடன் ஒப்பிட்டு விசாரணையைத் தொடங்கினர். கொலையாளியின் புகைப்படத்தை சென்னை, பெங்களூரு ஆய்வகத்துக்கு அனுப்பி வைத்து சோதனை செய்தனர். சிசிடிவி கேமராவில் பதிவான உருவத்துடன் சந்தேகத்துக்கு இடமான நபரின் உருவமும் ஒத்துப்போனதால் அவரே கொலையாளி என்பது உறுதி செய்யப்பட்டது.
இதனையடுத்து, திண்டுக்கல் மாவட்டம், சித்தேரியூர் கிராமத்தைச் சேர்ந்த கொலைாளி ஆண்டிசாமி (19) என்பவரை போலீஸார் நேற்று கைது செய்தனர். போலீஸார் விசாரணையில் ஆண்டிசாமிக்கு கஞ்சா பழக்கம் இருந்து வந்த நிலையில், பணத்துக்காக முதியவர்கள் தலையில் கல்லைப் போட்டுக் கொலை செய்தது தெரியவந்தது. வேளாங்கண்ணியில் இதேபோல பிச்சைக்காரர் ஒருவரின் தலையில் கல்லைப் போட்டுக் கொலை செய்து, பணம் திருடியதை ஆண்டிசாமி போலீஸாரிடம் ஒப்புக் கொண்டுள்ளார்.
தொடர்ந்து வேறு மாவட்டங்களில் இதுபோன்று ஆண்டிசாமி கொலை செய்துள்ளாரா என்பது குறித்தும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.