க்ரைம்

மாமூல் தர மறுத்ததால் தகராறு: ஓட்டேரியில் ஆட்டோ ஓட்டுநர் வெட்டிக் கொலை

செய்திப்பிரிவு

ஓட்டேரியில் மாமூல் கேட்டுத் தகராறு செய்த ரவுடிகள் குறித்துப் புகார் அளித்த விவகாரத்தில், ஆட்டோ ஓட்டுநர் 6 பேர் கொண்ட கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

பெரம்பூர், புதிய காலனி பிரதான சாலையில் வசித்தவர் தன்ராஜ் (32). இவர் ஆட்டோ ஓட்டுநராகத் தொழில் செய்து வந்தார். நேற்றிரவு தன்ராஜ் தனது மனைவியை அழைக்க மாமியார் வீட்டுக்குச் சென்றுள்ளார். இரவு 10 மணி அளவில் தன்ராஜ் தனது மாமியார் வீட்டின் அருகில் நின்று கொண்டிருந்தார்.

அப்போது 3 இருசக்கர வாகனத்தில் வந்த ஆறு நபர்கள் திடீரென தன்ராஜ் மனைவியின் கையில் வெட்டி, தலையில் கத்தியால் தாக்கினர். இதைப் பார்த்த தன்ராஜ் அவர்களைத் தடுத்தார். வெட்டு வாங்கிய அவரது மனைவியும், மற்ற உறவினர்களும் அங்கிருந்து தப்பிச் சென்றனர். ஆத்திரத்தில் தன்ராஜை சூழ்ந்துகொண்டு கத்தி, அரிவாள் போன்ற ஆயுதங்களால் சரமாரியாக வெட்டிவிட்டு அந்த ஆறு நபர்கள் தப்பி ஓடினர்.

இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த தன்ராஜின் மனைவி, உறவினர்கள், அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி சில மணிநேரத்தில் தன்ராஜ் உயிரிழந்தார்.

சம்பவம் குறித்து தகவல் அறிந்து புளியந்தோப்பு போலீஸார் தன்ராஜ் உடலைப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிவிட்டு சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் வெளிவந்த தகவல்கள்:

கொலை செய்யப்பட்ட தன்ராஜின் மைத்துனர்கள் ராஜேஷ்குமார் விக்னேஷ்குமார், யோகேஷ்குமார் ஆகியோர் அவர்கள் வீட்டருகே டாஸ்மாக் கடை மூடப்பட்ட பிறகு மதுபானங்களை பிளாக்கில் அதிக விலைக்கு மதுவை விற்று வந்துள்ளனர்.

இதுகுறித்து அறிந்த அதே பகுதியைச் சேர்ந்த ரவுடிகள் தொண்டை வலி ராஜேஷ், மற்றும் சுமன் என்பவர்கள் மதுபானம் விற்றவர்களிடம் கடந்த 20-ம் தேதி இரவு மாமூல் கேட்டுத் தகராறு செய்துள்ளனர். பின்னர் நேற்று காலை 8 மணி அளவில் மீண்டும் மாமூல் கேட்டுத் தகராறு செய்த அவர்கள் அருகில் உள்ள பெட்டிக் கடையில் இருந்த பாட்டில்களை எடுத்து உடைத்துள்ளனர்.

இதையடுத்து தன்ராஜின் மைத்துனர்கள் மூவரும் காவல் நிலையத்தில் வாய்மொழிப் புகார் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. புகார் பற்றி அறிந்த மாமூல் கேட்டு மிரட்டிய ரவுடி சுமன், எங்கள் மீது போலீஸில் புகார் கொடுக்கும் அளவுக்கு தைரியமா? என தன்ராஜின் மைத்துனர்களை மிரட்டிச் சென்றுள்ளார்.

இந்நிலையில் நேற்றிரவு மனைவியைப் பார்க்க ஓட்டேரியில் உள்ள மாமியார் வீட்டுக்கு வந்த தன்ராஜ் வீட்டு வாசலில் மனைவி சபரி மற்றும் அவரது பெற்றோருடன் வீட்டின் அருகில் நின்று பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு 3 இருசக்கர வாகனங்களில் வந்தவர்கள் தன்ராஜை வெட்டி விட்டுச் சென்றனர்.

அவர்கள் யார் என்பதும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. அஜய், திலக்ராஜ், விக்கி, வினோத், பால்பிரவீன், சாமுவேல், ரூபன், தொண்டை வலி ராஜேஷ் ஆகியோர் எனத் தெரியவந்துள்ளது.

கொலை குறித்து ஐபிசி பிரிவு 147, 148, 341, 302 கீழ் வழக்குப் பதிவு செய்த போலீஸார் கொலை தொடர்பாக பெரம்பூர்,சேமாத்தம்மன் நியூ காலனி பிரதான சாலையைச் சேர்ந்த அஜய் (19), பார்க் தெருவைச் சேர்ந்த திலக்ராஜ் (23), சேமாத்தம்மன் நியூகாலனியைச் சேர்ந்த விக்கி (21), கீழ்பாக்கம் அம்பேத்கர் நகர் மூலம் வினோத் (24), பெரம்பூர், சந்திரயோகி சமாதி சாலையைச் சேர்ந்த பால் பிரவீன் (26) கான்ஸ்டபிள் சாலையைச் சேர்ந்த சாமுவேல் (20) ஆகிய 6 பேரை புளியந்தோப்பு போலீஸார் பிடித்து விசாரித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT