க்ரைம்

17 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: பெண் உட்பட 5 பேர் போக்சோ பிரிவில் கைது 

டி.ஜி.ரகுபதி

17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 4 பேரும், அதற்கு உதவிய ஒருவரும் போக்சோ பிரிவில் கைது செய்யப்பட்டனர்.

சென்னையைச் சேர்ந்த தம்பதியருக்கு 17 வயதில் மகள் உள்ளார். வயிற்று வலியால் அவதிப்பட்ட இவரை பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். பரிசோதனையில் அவர் கர்ப்பமாக இருப்பது தெரிந்தது.

விசாரணையில், கோவை மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த வாடகைக் கார் ஓட்டுநர் மணிகண்டன் (35), சென்னை பள்ளிக்கரணையைச் சேர்ந்த ரங்கராஜ் (22), ஜெபராஜ் (25), ஜெயக்குமார் (27) ஆகியோர் அச்சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததும், அதற்கு சென்னையைச் சேர்ந்த மலர்விழி (45) என்பவர் உதவியதும் தெரிந்தது.

இதையடுத்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தரப்பினர், மேட்டுப்பாளையம் ரயில்வே காவல்துறையில் புகார் அளித்தனர். டிஎஸ்பி அண்ணாதுரை தலைமையிலான ரயில்வே காவல்துறையினர் போக்சோ பிரிவில் மேற்கண்ட 5 பேரையும் கைது செய்தனர்.

மேலும்,‘மலர்விழி தனக்குத் தெரிந்த ரங்கராஜ், ஜெபராஜ், ஜெயக்குமாரை அச்சிறுமிக்கு அறிமுகப்படுத்தியுள்ளார். அவர்கள் அச்சிறுமியை சில மாதங்களுக்கு முன்னர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். பின்னர், அதிலிருந்து சில தினங்கள் கழித்து ஆண் நண்பர்களுடன் பழகுவதைப் பெற்றோர் கண்டித்ததால் அச்சிறுமி ரயில் மூலம் சென்னையில் இருந்து மேட்டுப்பாளையத்துக்கு வந்துள்ளார். ரயில் நிலையத்தில் இருந்த அவரை, வேலை வாங்கித் தருவதாக கூறி தன் வீட்டுக்கு அழைத்துச் சென்று மணிகண்டன் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்’ என்பதும் விசாரணையில் தெரிந்தது.

விசாரணைக்குப் பின்னர் இந்த வழக்கு, உள்ளூர் போலீஸாரிடம் ஒப்படைக்கப்படும் என மேட்டுப்பாளையம் ரயில்வே காவல்துறையினர் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT