க்ரைம்

நெல்லையில் ஆசிரியர் அடித்ததால் மாணவிக்கு கண்ணில் காயம்: மருத்துவமனையில் அறுவை சிகிச்சை; உறவினர்கள் போராட்டம்

அ.அருள்தாசன்

ஆசிரியர் அடித்ததால் மாணவிக்கு கண்ணில் காயம் ஏற்பட்டு அது அறுவை சிகிச்சை வரை சென்ற சம்பவம் நெல்லையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால், மாணவியைத் தாக்கிய ஆசிரியரைக் கைது செய்யக் கோரி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நெல்லை மாவட்டம் கூடன்குளத்தில் செயல்பட்டு வரும் மேல்நிலைப்பள்ளியில் ஐந்தாம் வகுப்பில் படித்து வருகிறார் மாணவி முத்தரசி. நேற்று நல்லொழுக்கப் பாட நேரத்தில், அதற்கான புத்தகங்கள் கொண்டு வரவில்லை என ஆசிரியர் ஆதிநாராயணன் பிரம்பால் முத்தரசியை அடித்துள்ளார்.

மேலும், புத்தகங்கள் கொண்டு வராத வேறு சில மாணவிகளையும் பிரம்பால் அடித்துள்ளார். அப்போது பிரம்பு ஒடிந்து அதன் பிசிறு முத்தரசியின் கண்ணில் குத்தியுள்ளது. இதனால் துடிதுடித்த முத்தரசி நெல்லையில் உள்ள தனியார் கண் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு கண்ணில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு பிசிறு அகற்றப்பட்டுள்ளது.

இதுபற்றி மாணவி முத்தரசியின் பாட்டி சுயம்பு கனி கூடங்குளம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்த நிலையில் மாணவி முத்தரசியைப் பிரம்பால் அடித்த ஆசிரியர் ஆதிநாராயணனை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் எனக் கோரி கூடங்குளம் பொதுமக்கள் மற்றும் முத்தரசியின் உறவினர்கள் இன்று பள்ளியை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர் .

இது தொடர்பாக கூடங்குளம் போலீஸார் வழக்கு பதிவு செய்து சிறுமியைத் தாக்கிய ஆசிரியர் ஆதிநாராயணனைத் தேடி வருகின்றனர்.

SCROLL FOR NEXT