நடிகர் விஜய்க்கு வருமான வரித்துறை இன்று ஆஜராக சம்மன் அனுப்பியுள்ளது. விஜய், அன்புச்செழியன், கல்போத்தி அகோரம், ஸ்க்ரீன் சீன் நிறுவன நிர்வாகிகள் உள்ளிட்டோருக்கும் இன்று ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
நடிகர் விஜய், ஏஜிஎஸ் நிறுவனம், பைனான்சியர் அன்புச்செழியன் உள்ளிட்டோர் வீடு, அலுவலகங்களில் கடந்த 5-ம் தேதி தொடங்கி 2 நாட்கள் வருமான வரித்துறை சோதனை நடந்தது. இதில் அன்புச்செழியன் வீடு, அலுவலகத்தில் ரூ.77 கோடி ரொக்கப் பணம், 1.5 கிலோ தங்கம் கைப்பற்றப்பட்டதாக வருமான வரித்துறை தெரிவித்தது.
இந்த ரெய்டு குறித்து வருமான வரித்துறை தரப்பில், “நடிகர் விஜய் நடித்த 'பிகில்' படம் வசூலில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதாக ரசிகர்கள், படக்குழுவினர், தயாரிப்பாளர் தரப்பில் கொண்டாடப்பட்டது. ரூ.300 கோடி வசூலானதாகக் கூறப்பட்டது. அதையொட்டி திரட்டப்பட்ட தகவலின் அடிப்படையில் இந்த வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது” எனத் தெரிவிக்கப்பட்டது.
தயாரிப்பாளர், நடிகர் விஜய், அவரது படத்தின் பைனான்சியர் மற்றும் விநியோகஸ்தர் ஆகியோரின் வீடு, அலுவலகம் உள்ளிட்ட சென்னை மற்றும் மதுரையில் உள்ள 38 இடங்களில் இந்தச் சோதனை இரண்டு நாள் நடந்தது.
வருமான வரித்துறை சோதனையில் முக்கியமான அம்சம் பைனான்சியர் அன்புச்செழியனிடம் கணக்கில் காட்டாப்படாத ரூ.77 கோடி ரொக்கப் பணம், 1.5 கிலோ தங்கம் கைப்பற்றப்பட்டது. கணக்கில் வராத ரூ.160 கோடிக்கான வருமான வரியை அன்புச்செழியன் கட்டுவதாகத் தெரிவித்தார் என்று வருமான வரித்துறை தரப்பில் கூறப்பட்டது.
இது தவிர இந்தச் சோதனையில் ஏராளமான சொத்து ஆவணங்கள், பத்திரங்கள், காசோலைகள், முன் தேதியிட்ட காசோலைகள் கைப்பற்றப்பட்டன. இந்த முழு சோதனையில் கிடைத்த ஆவணங்கள், சாட்சிகள் அடிப்படையில் மறைக்கப்பட்ட பணம் ரூ.300 கோடியைத் தாண்டும் எனக் கணக்கிடப்பட்டதாக வருமான வரித்துறை தெரிவித்தது.
இதுதவிர படத்தயாரிப்பாளர் ஏஜிஎஸ் நிறுவன உரிமையாளர் கல்போத்தி அகோரம் வீடு, அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. அங்கு அலுவலக வரவு- செலவு கணக்குகள் கைப்பற்றப்பட்டுள்ளன. அங்கிருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்களை ஆய்வு செய்யும் பணி நடக்கிறது. கைப்பற்றப்பட்ட ஆவணங்கள், ரசீதுகள், வவுச்சர்கள், நடிகருக்கு வழங்கப்பட்ட ஊதியம் உள்ளிட்ட விவரங்களை ஆராயும் பணியும் தொடர்வதாக வருமான வரித்துறை தெரிவித்தது.
இதுதவிர நெய்வேலியில் படப்பிடிப்பில் இருந்த நடிகர் விஜய்யிடம் நேரில் விசாரணை நடத்திய வருமான வரித்துறை அதிகாரிகள் அவரை சென்னைக்கு அழைத்து வந்தனர். அவரது வீட்டில் 2 நாட்கள் சோதனை நடைபெற்றது. சோதனையில் விஜய்யின் சொத்து ஆவணங்களில் அவரது முதலீடு குறித்து ஆய்வு செய்யப்படுவதாகவும், அவருக்கு 'பிகில்' திரைப்படத்தில் தயாரிப்பாளரிடமிருந்து அளிக்கப்பட்ட சம்பளம் குறித்த விசாரணை இந்தச் சோதனையின் முக்கிய அம்சம் ஆகும் என்றும் வருமான வரித்துறை தெரிவித்திருந்தது.
இதுதவிர நடிகர் விஜய் பட விவகாரம் குறித்து ஆலோசிப்பதற்காக அடையாறு சாஸ்திரி நகரில் தனியாக அலுவலகம் வைத்துள்ளார், அந்த இடத்திலும் சோதனை நடத்தப்பட்டு அங்கு 'பிகில்' சம்பந்தப்பட்ட ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.
இந்நிலையில் நடிகர் விஜய், கல்போத்தி அகோரம், அன்புச்செழியன், ஸ்க்ரீன் சீன் நிர்வாகி உள்ளிட்டோருக்கு வருமான வரித்துறை இன்று ஆஜராக சம்மன் அனுப்பியுள்ளது. சென்னை நுங்கம்பாக்கத்திலுள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் இன்று அனைவரும் ஆஜராகி விளக்கம் அளிக்க சம்மனில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று விஜய் விசாரணையில் ஆஜராகமாட்டார் எனத் தெரிகிறது. அவர் நெய்வேலியில் மாஸ்டர் படப்பிடிப்பில் இருப்பதாகவும் பின்னொரு நாளில் ஆஜராக அனுமதிக்கும்படி விஜய் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. விஜய் தரப்பில் வழக்கறிஞர் மற்றும் ஆடிட்டர் ஆஜராவார்கள் எனத் தெரிகிறது.