கொடைக்கானல் குண்டுபட்டி பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில் போதை விருந்தில் ஈடுபட்டிருந்த 250-க்கும் மேற்பட்ட இளைஞர்கள், இளம் பெண்களை போலீஸார் சுற்றி வளைத்து எச்சரித்து அனுப்பினர். போதை விருந்துக்கு இடம் அளித்த நிலத்தின் உரிமையாளர், ஒருங்கிணைப்பாளர்கள் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.
முதற்கட்ட விசாரணையில் இணையதளம் மூலம் போதை விருந்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது தெரியவந்தது.
ஆன்லைனில் ஆள் சேர்த்தது எப்படி?
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே சுமார் 35 கிமீ தொலைவில் குண்டுபட்டி மலை கிராமம் அமைந்துள்ளது . அந்த கிராமத்தில் அடிக்கடி சட்டவிரோதமாக இரவு நேர பார்ட்டிகள் நடத்தப்படுவதாகவும். அதில் போதை பொருட்கள் பயன்படுத்துவதாகவும் மதுரை சிறப்பு போதை தடுப்புப் பிரிவு போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனைத் தொடர்ந்து தென்மண்டல ஐ.ஜி உத்தரவின் பெயரில் 3 டி.எஸ்.பிக்கள் தலைமையில் குண்டுபட்டி பகுதியில் போலீஸார் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது, தனியார் தோட்டத்தில் இளைஞர்கள், 6 இளம் பெண்கள், 2 வெளிநாட்டவர் உட்பட 250-க்கும் மேற்பட்டோர் இணையத்தின் மூலம் ஒன்று சேர்ந்து இரவு பார்ட்டியில் கலந்து கொண்டது தெரியவந்தது.
பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள், ஐடி ஊழியர்கள் பார்டியில் கலந்து கொண்டதும் போதை பொருட்களான கஞ்சா, போதை காளான், எல்.எஸ்.டி ஸ்டாம்ப் உள்ளிட்டவை அதிக அளவில் பயன்படுத்தி கேளிக்கை நடனங்களும் ஆடியதும் தெரியவந்தது.
இரவு விருந்தில் கலந்து கொண்டவர்களை போலீஸார் அதிகாலையில் சுற்றி வளைத்தனர். அவர்களில் பலரிடம் இருந்து பல வகையான போதை வஸ்த்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
தொடர்ந்து நிலத்தின் உரிமையாளர் கற்பகமணி மற்றும் இதற்கு ஏற்பாடு செய்திருந்த ஹரிஸ்குமார், தருண் குமார் ஆகியோரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இந்த இரவு விருந்தில் கலந்து கொண்டவர்களிடம் தனித்தனியாக 5 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை மேற்கொண்டு 260-க்கும் மேற்பட்டவர்களையும் இது போன்று இனி ஈடுபடக்கூடாது என எச்சரிக்கை செய்து விடுவித்துள்ளனர்.