ஜெயக்குமாரை சிபிசிஐடி போலீஸார் தேடிவரும் நிலையில், அவர் நேற்று காலை சைதாப்பேட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் சரணடைந்தார். அவரை எழும்பூர் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்திய நிலையில் 7 நாள் போலீஸ் காவலுக்கு நீதிமன்றம் அனுமதி அளித்தது.
குரூப்-4 முறைகேடு விவகாரம் பெரிதாக வெடித்த நிலையில் அடுத்தபடியாக குரூப்-2(ஏ) தேர்விலும் முறைகேடு நடந்தது தெரியவந்தது. இதில் தினமும் குறைந்தது 2 பேருக்கும் மேற்பட்டோர் கைதாகி வருகின்றனர். இந்நிலையில் இரண்டு முக்கியக் குற்றவாளிகளில் ஒருவரான காவலர் சித்தாண்டியை போலீஸார் கைது செய்தனர். இடைத்தரகராகச் செயல்பட்ட ஜெயக்குமார் மட்டும் சிக்காமல் இருந்தார்.
ஜெயக்குமார் சிக்கினால் மட்டுமே இதன் பின்னணியில் இருக்கும் முக்கிய நபர்கள், வேறு முறைகேடுகள் குறித்து பல தகவல்கள் வெளியாகும். இந்நிலையில் ஜெயக்குமார் பற்றிய தகவலோ, அவர் இருக்குமிடம் குறித்த தகவலையோ பொதுமக்கள் அளிக்கலாம். அவ்வாறு அளிப்பவர்களுக்கு தகுந்த சன்மானம் அளிக்கப்படும் என சிபிசிஐடி போலீஸார் அறிவித்தனர்.
சிபிசிஐடி போலீஸார் சார்பில் தமிழகம் முழுவதும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன. சிபிசிஐடி போலீஸார் தீவிரமாகத் தேடிவந்த நிலையில், நேற்று காலை சைதாப்பேட்டை குற்றவியல் நீதிமன்ற நடுவர் கௌதமன் முன்னிலையில் ஜெயக்குமார் சரணடைந்தார்.
இடைத்தரகர் ஜெயக்குமாரை நாளை வரை (பிப்.7) சிறையில் வைக்கவும், அவரைப் புழல் சிறையில் அடைக்கவும் குற்றவியல் நடுவர் உத்தரவிட்டார். இன்று சிபிசிஐடி வழக்குகளை விசாரணை நடத்திவரும் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும் 23-வது குற்றவியல் நீதிமன்ற நடுவர் கௌதமன் உத்தரவிட்டார்.
இதையடுத்து ஒரு நாள் காவலில் ஜெயக்குமாரை புழல் மத்திய சிறையில் போலீஸார் அடைத்தனர். இன்று காலை சிபிசிஐடி வழக்குகளை விசாரித்துவரும் எழும்பூர் குற்றவியல் நீதிமன்ற நடுவர் நாகராஜ் முன் ஜெயக்குமாரை ஆஜர்படுத்தினர்.
விசாரணையின்போது நீதிமன்ற நடுவர் முன், நான் எந்த தவறும் செய்யவில்லை, நான் குற்றமற்றவன் என ஜெயக்குமார் கண்ணீர் மல்க தெரிவித்தார். பின்னர் அவரை 10 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க சிபிசிஐடி போலீஸார் அனுமதி கேட்டனர். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட குற்றவியல் நீதிமன்ற நடுவர், 7 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி அளித்தார்.
இதையடுத்து ஜெயக்குமாரை இன்று மாலையே சிபிசிஐடி அலுவலகத்துக்கு போலீஸார் அழைத்துச் செல்கின்றனர். அவரிடம் நடத்தும் விசாரணையில் பல்வேறு தகவல்கள் வெளியாகும் எனத் தெரிகிறது.
தவறவிடாதீர்!