தெலங்கானா மாநிலம் சித்திபேட்டை மாவட்டத்தில் உள்ள அக்கனாபேட்டை கிராமத்தைச் சேர்ந்த டி.சதானந்தம் என்பவர் தன் அண்டை வீட்டில் குடியிருக்கும் கங்கராஜு என்பவரை தகராறு ஒன்றில் ஏ.கே.47 ரக துப்பாக்கியால் தாக்க வந்தது அந்த ஊரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சாதாரணத் துப்பாக்கிகள், பெட்ரோல் குண்டுகள் என்று கலாச்சாரம் வன்முறையாக மாறியுள்ள நிலையில் ஏ.கே.47 ரக துப்பாக்கி என்றால் யாருக்கும் குலைநடுங்கவே செய்யும்.
சதானந்தம், கங்கராஜு இடையே காம்பவுண்ட் சுவர் குறித்து 3 நாட்களுக்கு முன்னதாக வாக்குவாதம் நடந்ததாகக் கூறப்படுகிறது. இந்தத் தகராறு முடியாமல் தொடர ஆத்திரமடைந்த சதானந்தம் தன் வீட்டுக்குள் சென்று துப்பாக்கியைத் தூக்கி சுட்டுள்ளார். அது ஏ.கே.47 ரக துப்பாக்கி! இதனையடுத்து உஷாரான அண்டை வீட்டார் சதானந்தத்தின் வீட்டை வெளியிலிருந்து தாழிட்டனர்.
மேலும், தங்கள் வீட்டுக்கும் சென்று கதவை உள்பக்கமாகத் தாழிட்டுக் கொண்டனர். கடும் ஆத்திரமடைந்த சதானந்தம் தன் வீட்டைத் திறக்க முடியாமல் போக ஜன்னல் பக்கமாக நின்று கொண்டு அண்டை வீட்டை நோக்கி ஏ.கே.47 துப்பாக்கியால் சுட்டார்.
இதற்கிடையே கிராமத்தினர் போலீஸாருக்குத் தகவல் அளிக்க சதானந்தம் தன் ஏ.கே.47 துப்பாக்கியுடன் மாயமானார். நல்ல வேளையாக துப்பாக்கிச் சூட்டில் ஒருவரும் காயமடையவில்லை.
இதனையடுத்து போலீஸார் சதானந்தன் வீட்டைச் சோதனையிட்டதில், 2 செல்போன்களைக் கைப்பற்றினர். இதோடு அவரின் 2 மனைவிகள் மற்றும் உறவினர் ஒருவரை போலீஸார் கைது செய்தனர்.
சதானந்தம் சுமார் 10 ஆண்டுகளாக நிழலுலகத்தில் இருந்ததாகவும் அவர் முன்னாள் நக்சலைட் என்று சந்தேகிப்பதாகவும் போலீஸார் தெரிவித்தனர். வெளியே வந்தாலும் துப்பாக்கியை மட்டும் தன்னுடன் கொண்டு வந்ததாகச் சந்தேகிக்கும் போலீஸார் அவரைத் தேடிப்பிடிக்க தனிப்படை அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.