குற்றச் செயல்களைத் தடுக்கும் வகையில் காவல்துறையின் நான்கு சக்கர ரோந்து வாகன போலீஸாருக்கு தகவல் அனுப்பி, கண்காணிக்கும் முறையில் மாற்றம் செய்யப் பட்டுள்ளது.
மதுரை நகரில் 22 காவல் நிலையங்கள் செயல்படுகின்றன. இவற்றின் எல்லைப் பகுதியில் நடக்கும் குற்றச்செயல்களைத் துரிதமாகத் தடுக்கும் வகையில் 20-க்கும் மேற்பட்ட நான்கு சக்கர ரோந்து வாகனங்களும், ஒவ்வொரு காவல் நிலையத்திலும் இரு சக்கர ரோந்து வாகனமும் இயங்குகின்றன.
குற்றச் சம்பவம், சட்டம், ஒழுங்கு பிரச்சினைகள் தொடர்பாக கட்டுப்பாட்டு அறைக்குச் செல்லும் அவசர அழைப்புகள் குறித்து அங்குள்ள போலீஸார் முகவரி உள்ளிட்ட விவரம் சேகரிப்பார்கள். இதன்பிறகு சம்பந்தப்பட்ட காவல் நிலைய ரோந்து வாகன போலீசாருக்குத் தகவல் தெரிவித்து நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்படுவர்.
காவலன் செயலி:
இது தவிர, தமிழகத்தில் சமீபத்தில் ‘காவலன் எஸ்ஓஎஸ்’ என்ற பிரத்யேக செயலி ஒன்று அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. இந்த செயலியை ஆன்ட்ராய்டு போனில் பதிவிறக்கம் செய்திருந்தால் ஆபத்தில் சிக்கும்போது, தனது செல்போனிலுள்ள எஸ்ஓஎஸ்.,ஸை அழுத்தினால் சம்பவ இடத்திற்குப் போலீஸார் துரிதமாகச் சென்று, ஆபத்தில் சிக்குவோரை மீட்கும் வகையில் உள்ளது. தற்போது தமிழக காவல்துறையில் இவ்விரு செயல்பாடுகளும் நடைமுறையில் உள்ளது.
இந்நிலையில், குற்றச் செயல்களைத் தடுக்கும் வகையில் காவல்துறையின் நான்கு சக்கர ரோந்து வாகன போலீஸாருக்கு தகவல் அனுப்பி, கண்காணிக்கும் முறையில் மாற்றம் செய்யப் பட்டுள்ளது.
கட்டுப்பாட்டு அறையில் இருந்து அறிவுறுத்தப்படும் தகவல்களின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு ரோந்து போலீஸார் குறித்த நேரத்தில் சென்றார்களா? எந்த இடத்தில் ரோந்து வாகனம் நிற்கிறது என்பதை அறிய ஏற்கெனவே செல்போன் வடிவிலான ‘டிவைஸ்’ வசதி இருந்தாலும், தற்போது, டேப்லெட் வடிவில் லொக்கேஷன் அறியும் கருவி நகரிலுள்ள 20-க்கும் மேற்பட்ட நான்கு சக்கர ரோந்து வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ளன.
இதன்மூலம் கட்டுப்பாட்டு அறையில் இருந்து தெரிவிக்கும் தகவல்களைத் திரையின் மூலம் அறிந்து, சம்பவ இடத்திற்கு துரிதமாக செல்வதற்கு வழித்தடத்துடன் கூடிய தகவலுக்கான இந்தக் கருவி வசதியாக இருக்கிறது என ரோந்துப் பணி போலீஸார் தெரிவிக்கின்றனர்.
போலீஸார் கூறியது: "ஒவ்வொரு அவசர அழைப்பும் சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்குச் சென்று, பிறகு அந்தந்த மாவட்டம், மாநகர் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் செல்லும் வகையில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.
இதன்பின், கட்டுப்பாட்டு அறை போலீஸார் சம்பந்தப்பட்ட ரோந்து மற்றும் காவல் நிலைய போலீஸாருக்கு தகவல் தெரிவித்து, குற்றச் சம்பவங்களைத் தடுக்க, நடவடிக்கை எடுக்கப்படுகிறது. குறிப்பாக ரோந்து வாகனங்களுக்குத் தகவல்கள் தெரிவித்து, அனுப்புவதற்கு ‘டிவைஸ் ’ வழங்கப்பட்டு இருந்தாலும், தற்போது புது வடிவிலான கருவிகள் வழங்கப்பட்டுள்ளன.
சம்பவ இடத்திற்கு ரோந்து வாகனம் எவ்வளவு நேரத்தில் சென்றது. அங்கு சென்றபின்பு, மீட்பு, தடுப்பு நடவடிக்கைகளைக் கண்காணிக்கும் வகையிலான இந்த ‘டிவைஸ்’ கருவிகள் வடிவமைக்கப்பட்டுள்ளது. இக்கருவியின் மூலம் தகவல் பெறப்பட்டு, சென்னை கட்டுப்பாட்டு அறை மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு அனுப்புவோம்" என்றனர்.