குரூப் 4 தேர்வு முறைகேடு வழக்கில் தேடப்பட்டுவந்த காவலர் சித்தாண்டி சிவகங்கை அருகே கலைக்குளம் பகுதியில் ஒரு தோட்டத்தில் பதுங்கியிருந்தபோது கைது செய்யப்பட்டார்.
டிஎன்பிஎஸ்சி குருப்-4 தேர்வு முறைகேடு தொடர்பாக சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். முறைகேட்டில் ஈடுபட்ட 99 தேர்வர்கள் நிரந்தர தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதுதவிர அரசு அதிகாரிகள், இடைத்தரகர்கள், பணம் கொடுத்து தேர்ச்சி பெற்றவர்கள் என பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் பலரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கில் தொடர்புடைய சென்னை காவல்துறையில் பணிபுரியும் சிவகங்கை மாவட்டம் பெரியகண்ணனூரைச் சேர்ந்த சித்தாண்டியை சிபிசிஐடி போலீஸார் தேடி வந்தனர்.
இவரின் குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் குரூப் 2 ‘ஏ’, குரூப் 4 தேர்வுகளில் மாநில அளவில் முதல் பத்து இடங்களில் தேர்ச்சி பெற்றிருப்பது சிபிசிஐடி போலீஸார் விசாரணையில் தெரியவந்ததையடுத்து தேடுதல் வேட்டை நடைபெற்று வந்தது.
இந்நிலையில் இன்று சென்னையில் இருந்து சிவகங்கை வந்த சிபிசிஐடி தனிப்படை போலீஸார் மற்றும் சிவகங்கை சிபிசிஐடி போலீஸார் சித்தாண்டியை பதுங்கியிருந்த தோட்டத்தை சுற்றிவளைத்து கைது செய்தனர். அவர் சென்னைக்கு அழைத்துச் செல்லப்படுகிறார்.
ஜெயக்குமாருக்கு வலை..
இதற்கிடையில், இந்த விவகாரத்தில் தொடர்புடைய இடைத்தரகர் ஜெயக்குமார் இன்னும் தலைமறைவாக இருக்கிறார். அவர் ஆந்திராவில் பதுங்கி இருக்கலாம் என்பதால் 4 பேர் கொண்ட சிபிசிஐடி தனிப்படையினர் ஆந்திராவில் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், ஜெயக்குமாரின் புகைப்படத்தை வெளியிட்டு, அவர் குறித்து விவரம் தெரிந்தால் உடனே தகவல் தெரிவிக்கும்படி சிபிசிஐடி போலீஸார் அறிவிப்பு வெளியிட்டனர்.
சித்தாண்டி அவரின் மனைவி மற்றும் ஜெயக்குமாரின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.