நகைக் கடை உரிமையாளர் வீட்டில் திருடிய பின்னர் பூஜை அறையிலிருந்த நகைக் கடையின் சாவி மூலம் நகைக் கடைக்குச் சென்று அங்கும் சேர்த்து 3 கிலோ தங்க நகை, 3 லட்சம் ரொக்கப் பணத்தை கொள்ளையடித்துச் சென்ற நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே விரிகோடு மடத்துவிளை பகுதியில் வசிப்பவர் ஆசைத்தம்பி. இவருக்கு மார்த்தாண்டம் பகுதியில் பல்வேறு வர்த்தக நிறுவனங்கள் உள்ளன. இது தவிர மார்த்தாண்டம் பேருந்து நிலையம் அருகே ஜெயஸ்ரீ ஜூவல்லர்ஸ் என்கிற நகைக்கடையை ஆசைத்தம்பியின் மகன் பொன் விஜய் நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு வழக்கம்போல் பணிகளை முடித்தபின், நகைக்கடை சாவியை பூஜை அறையில் சாமி படத்தின் முன் வைத்துவிட்டு பொன் விஜய் குடும்பத்தினர் உறங்கிக் கொண்டிருந்தனர்.
அப்போது சில மர்ம நபர்கள் அவரது வீட்டு மாடிக் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். வீட்டின் பூஜை அறையில் வைக்கப்பட்டிருந்த 65 சவரன் நகை மற்றும் இரண்டு லட்சம் ரொக்கப் பணத்தை கொள்ளை அடித்த அவர்கள், நகைக்கடையின் சாவியையும் எடுத்துக்கொண்டனர்.
சாவியை எடுத்த அவர்கள், பின்னர் அங்கிருந்து நேராக மார்த்தாண்டம் பேருந்து நிலையம் சென்றனர். பொன் விஜய் நடத்தி வரும் நகைக்கடையை சாவி மூலம் திறந்து, அங்கிருந்த 3 கிலோ நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றனர். காலையில் வீட்டில் நகை கொள்ளை போனதை அறிந்த ஆசைத்தம்பியும் பொன் விஜய்யும் நகைக்கடையின் சாவி இல்லாததைக் கண்டு அதிர்ச்சி அடைந்து நகைக்கடைக்கு வந்தனர்.
அங்கு நகைக்கடை பூட்டு திறக்கப்பட்டு உள்ளேயிருந்த நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. ஒரே நேரத்தில் வீடு மற்றும் நகைக்கடையில் 3 கிலோ தங்கம் ரூ.3 லட்சம் ரொக்கப் பணத்தைக் கொள்ளையடித்துச் சென்றதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
பொன்.விஜய் கொடுத்த புகாரின் பேரில் மார்த்தாண்டம் போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். நகைக்கடையின் கண்காணிப்பு கேமரா பதிவுகளைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர். அதில் காலை 4 மணி அளவில் முழுவதும் உடலை மூடி முகமுடி அணிந்த ஒரு நபர் நகைகளைத் திருடுவது பதிவாகியிருந்தது. இச்சம்பவத்தில் ஒருவர் உள்ளே ஈடுபட்டாலும் ஒருவருக்கு மேற்பட்ட ஆட்கள் ஈடுபட்டிருக்கலாம் என போலீஸார் கருதுகின்றனர்.
சம்பவ இடத்தில் கைரேகை நிபுணர்கள், தடயவியல் நிபுணர்கள், மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு ஆய்வு நடத்தப்பட்டது. கடந்த டிசம்பர் மாதம் இதே மார்த்தாண்டம் பகுதியில் ஒரு நகைக்கடையில் 150 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டது. இதில் இதுவரை குற்றவாளிகள் பிடிபடவில்லை.
யார் செய்வது, வீட்டில் கொள்ளையடித்த கையோடு நள்ளிரவில் மார்த்தாண்டம் பேருந்து நிலையத்துக்குச் செல்லும் கொள்ளையர்கள் அங்கிருந்த நகைக் கடையைத் துணிச்சலாகத் திறந்து கொள்ளையடிக்கும் அளவுக்கு போலீஸ் ரோந்துப் பணி மெத்தனமாக உள்ளதா? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.
வடமாநிலக் கொள்ளையர்கள் கைவரிசையா என்கிற கோணத்திலும் விசாரணை நடக்கிறது. இந்நிலையில், கொள்ளைச் சம்பவம் நடைபெற்ற வீடு மற்றும் நகைக் கடையில், போலீஸ் எஸ்.பி. ஸ்ரீநாத் நேரடியாகச் சென்று விசாரணை நடத்தினார்.
நகைக்கடை உரிமையாளர் பற்றி நன்கு அறிந்த அவர்கள் சாவியை எங்கு வைப்பார்கள் என்பது பற்றியெல்லாம் அறிந்த, வீட்டுக்குள் எந்த வழியாக நுழையலாம் என்பது பற்றி நன்கு தெரிந்த, நகைக்கடை உரிமையாளருடன் தொடர்பில் உள்ள யாரோ ஒரு நபர்தான் இந்தக் கொள்ளைக்கு மூளையாகச் செயல்பட்டிருக்க வேண்டும் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.