க்ரைம்

ஆடிட்டர் குருமூர்த்தி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச முயற்சி: 4 பேர் கைது, 2 பேருக்கு வலைவீச்சு

செய்திப்பிரிவு

துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி வீட்டில் தாக்குதல் நடத்த வந்த நபர்கள்: சிசிடிவி காட்சியில் சிக்கினர். இதையடுத்து வழக்குப்பதிவு செய்த போலீஸார் சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் பெரியார் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த 4 பேரைக் கைது செய்துள்ளனர்.

துக்ளக் பத்திரிகை ஆசிரியர் சோ மறைவுக்குப்பின் ஆடிட்டர் குருமூர்த்தி அதன் ஆசிரியர் பொறுப்பை ஏற்று நடத்தி வருகிறார். சமீபத்தில் துக்ளக் பண்டிகையின் 50-ம் ஆண்டுவிழா சென்னையில் நடந்தது.

இந்த விழாவுக்கு துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி தலைமை வகித்தார். இந்தவிழாவில் குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். விழாவில் ரஜினி பேசிய பேச்சு சர்ச்சையானது. ரஜினியின் அரசியல் வருகைக்கான பேச்சாகவும், அதற்காக தவறான தகவலை அவர் பதிவு செய்தார் எனவும் திராவிடர் இயக்கங்கள் குற்றம்சாட்டின.

இந்நிலையில் குடியரசு தினத்தன்று அதிகாலை 3 மணி அளவில் மயிலாப்பூரில் வசித்து வரும் துக்ளக் பத்திரிகை ஆசிரியர் குருமூர்த்தி இல்லத்தின் முன்பு, மூன்று இரு சக்கர வாகனங்களில் வந்த 6 நபர்கள் பெட்ரோல் குண்டு வீச முயற்சி செய்தனர். அப்போது நாய் பலமாகக் குரைத்ததால் காவலுக்கு இருந்த ஆயுதப்படை போலீஸ் மணிகண்டன் மற்றும் குருமூர்த்தி வீட்டுப் பணியாளர் இருவரும் அவர்களைப் பிடிக்க முயற்சி செய்தனர்.

இதனால் அவர்கள் அதிர்ச்சி அடைந்து வாகனத்தில் ஏறி ஓட்டம் பிடித்தனர். கடைசி இரு சக்கர வாகனத்தில் வந்த இரு நபர்களில் ஒருவர் கையில் வைத்திருந்த மஞ்சள் பையிலிருந்து பாட்டிலை எடுக்க முயற்சிக்கும் போது, பாதுகாப்பு பணியில் இருந்த மணிகண்டன் பிடிக்க முயல அவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

இவை அனைத்தும் ஆடிட்டர் குருமூர்த்தி இல்லத்தில் உள்ள சிசிடிவி காட்சியிலும், தெருமுனையில் உள்ள சிசிடிவி காட்சியிலும் பதிவாகியிருந்தது. இதை வைத்து போலீஸார் சம்பந்தப்பட்ட நபர்களைத் தேடி வந்தனர்.

இந்த நிலையில் மேற்கண்ட சம்பவத்தில் ஈடுபட்டதாக சந்தேகத்தின்பேரில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த, ஐசிஎஃப் பகுதியைச் சேர்ந்த ஜனா, ராயப்பேட்டை பகுதியைச் சேர்ந்த சசி, தமிழ் (எ) செல்லக்கண்ணா, பாபு உள்ளிட்ட 4 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

மயிலாப்பூர் துணை ஆணையாளர் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தினார். இந்த சம்பவம் தொடர்பாக மேலும் சிலரைத் தேடி வருகின்றனர்.

SCROLL FOR NEXT