கோவை மாவட்டம் சிங்காநல்லூர் அருகே 100 பவுன் நகை, ரூ.10 லட்சம் பணத்தைத் திருடிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.
கோவை சிங்காநல்லூர் அருகேயுள்ள மசக்காளிபாளையத்தைச் சேர்ந்தவர் ஆதம்ஷா. தொழிலதிபர். இவர் கடந்த 24-ம் தேதி வீட்டைப் பூட்டிவிட்டு குடும்பத்துடன் சொந்த ஊரான தூத்துக்குடிக்கு சென்றிருந்தார்.
மீண்டும் நேற்று (ஜன.26) இரவு கோவையில் உள்ள வீட்டுக்குத் திரும்பினார். வீட்டுக்குள் சென்று பார்த்த போது, பக்கவாட்டுக் கதவு உடைக்கப்பட்டு இருந்தது தெரிந்தது.
வீட்டில் இருந்த பொருட்கள் கலைந்து கிடந்தன. வீட்டில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு இருந்தது. அதிலிருந்த 100 பவுன் நகை, ரூ.10 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. அவற்றை மர்மநபர்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது. இச்சம்பவம் தொடர்பாக சிங்காநல்லூர் குற்றப்பிரிவு காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.