க்ரைம்

மதுரை - மேலூர் சாலையில் தனியார் பள்ளி வேன் கவிழ்ந்து விபத்து: 10 குழந்தைகள் காயம்

என்.சன்னாசி

மதுரை - மேலூர் சாலையில் தனியார் பள்ளி வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பள்ளிக் குழந்தைகள் 10 பேர் காயமடைந்தனர்.

சிவகங்கை மாவட்டம் மணலூர் அருகே தனியார் மேல்நிலைப் பள்ளி ஒன்று இயங்குகிறது. இந்தப் பள்ளியில் மதுரை பூஞ்சுத்தி, சுண்ணாம்பூர், திருவாதவூர் கிராமங்களைச் சேர்ந்த மாணவர்களும் படிக்கின்றனர்.

இந்நிலையில் இன்று (திங்கள்கிழமை) காலை வழக்கம்போல் இந்த கிராமத்தைச் சேர்ந்த மாணவர்கள் சிலரை ஏற்றிக்கொண்டு வேண் பள்ளி நோக்கிச் சென்றுகொண்டிருந்தது.

அப்போது, சுண்ணாம்பனூர் அருகே வேன் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தலைகீழாகக் கவிழ்ந்தது. இதில் வேனில் இருந்த குழந்தைகளில் 10 பேர் காயமடைந்தனர்.

8 குழந்தைகளுக்கு லேசான காயம் ஏற்பட்ட நிலையில் இரண்டு குழந்தைகளுக்கு கை, கால் முறிவு ஏற்பட்டு மதுரை மாட்டுத்தாவணி அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து மேலூர் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT