தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் கூட்டுறவு பண்டகசாலை மேலாளர் உட்பட 3 பேர் அரிவாளால் தாக்கப்பட்டனர். தாக்குதல் நடத்திய கரும்பு வியாபாரி நாகராஜை போலீஸார் கைது செய்தனர்.
ஆண்டிபட்டி பேருந்துநிலையம் அருகே கூட்டுறவு பண்டகசாலை (ஏ.1663) உள்ளது. இங்கிருந்து அரசுத் துறை சார்ந்த விடுதிகள், அலுவலர்களுக்கு மருந்து உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் இந்த பண்டகசாலை முன்பு இன்று காலை மறவப்பட்டியைச் சேர்ந்த நாகராஜ்(43) என்பவர் கரும்புக்கட்டுகளை வைத்து வியாபாரம் செய்து கொண்டிருந்தார்.
பாதை மறிக்கப்பட்டு வாடிக்கையாளர்கள் வர முடியாத நிலை இருந்ததால் ஊழியர்கள் கரும்புக்கட்டுகளை சற்று தள்ளி வைத்து வியாபாரம் செய்யுமாறு கூறியுள்ளனர்.
இதில் இருதரப்பினர்க்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் கோபமடைந்த நாகராஜ் கரும்பு வெட்ட வைத்திருந்த அரிவாளால் பண்டகசாலை ஊழியர்களை விரட்டி விரட்டி தாக்கத் துவங்கினார். இதில் மேலாளர் கோட்டைச்சாமி, ஊழியர்கள் பெரியசாமி, முருகேசன் ஆகியோர் காயமடைந்தனர். அருகில் உள்ள பொதுமக்கள் நாகராஜைப் பிடித்து ஆண்டிபட்டி போலீஸில் ஒப்படைத்தனர்.
காயம் அடைந்த மூன்று பேரும் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். போலீஸார் நாகராஜை கைது செய்து விசாரித்து வருகின்றனர். அரிவாளால் தாக்கப்பட்டது சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.