தீவிரவாத அமைப்புகளுக்கு சிம் கார்டு வழங்கிய விவகாரம் என்ஐஏ விசாரணைக்கு மாற்றப்பட்ட நிலையில், கைது செய்யப்பட்டவர்கள் மீது முதற்கட்டமாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த சில வாரங்களுக்கு முன் பெங்களூருவில் கியூ பிரிவு போலீஸாரால் ஹனிப் கான், இம்ரான் கான், அப்துல் செய்யது ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் பெங்களூரு போலீஸார் 10 நாட்கள் விசாரணை நடத்தியதில், இவர்களோடு தொடர்புடைய பெங்களூரைச் சேர்ந்த மகபூப் பாஷா, ஹிஜாஸ் அகமது ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்களுக்கு சிம் கார்டு உள்ளிட்ட உதவிகளைச் சிலர் செய்து கொடுப்பதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் தமிழக கியூ பிரிவு போலீஸார் தமிழகத்தில் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்களுக்கு உதவிய காஞ்சிபுரத்தைச் சேர்ந்த பச்சையப்பன், அன்பரசன் ராஜேஷ் ,லியாகத் அலி, அப்துல் ரகுமான் ஆகிய 5 பேரைக் கைது செய்தனர்.
ஐஎஸ், அல் உம்மா உள்ளிட்ட தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்களுக்கு 200-க்கும் மேற்பட்ட சிம் கார்டுகளை போலி ஆவணங்கள் மூலம் மேற்கண்ட 5 பேர் கொடுத்தது தெரியவந்தது. சிம் கார்டுகள் மட்டுமல்லாமல் போலி பாஸ்போர்ட் மற்றும் வெளிநாட்டில் உள்ள தீவிரவாதிகளுடன் பேச மென்பொருள் ஆகியவற்றைத் தயார் செய்து கொடுத்ததும் தெரியவந்தது.
கைது செய்யப்பட்டவர்கள் பெரிய நெட்வொர்க்காக இந்தியாவில் பல மாநிலங்களில் இயங்கி வருவதை அடுத்து நேற்று இந்த வழக்கு தமிழக கியூ பிரிவு போலீஸாரிடம் இருந்து தேசிய புலனாய்வு முகமைக்கு (என்.ஐ.ஏ) மாற்றப்பட்டது. அதன் தொடர்ச்சியாக வழக்கைக் கையில் எடுத்துள்ள என்ஐஏ அமைப்பினர் தமிழகத்தில் கைது செய்யப்பட்ட 5 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
அடுத்தகட்டமாக பெங்களூரில் கைது செய்யப்பட்டவர்களின் வாக்குமூலத்தை அடிப்படையாக வைத்து இந்த வழக்கில் இணைக்கவும் திட்டமிட்டுள்ளனர். கைதான 5 பேரும் யார் யாருக்கெல்லாம் கடந்த காலங்களில் சிம் கார்டுகள் கொடுத்தனர், தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த யார் யாருடனெல்லாம் இவர்கள் தொடர்பு கொண்டிருக்கிறார்கள் போன்ற பல்வேறு கோணங்களில் விசாரணையை என்ஐஏ அமைப்பினர் கொண்டு செல்லவுள்ளனர்.