உதவி ஆய்வாளர் வில்சன் கொலை வழக்கில் தென்காசியில் கைதான 5 பேர் மீதும் ‘உபா’ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளை சோதனைச் சாவடியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பணியில் இருந்த உதவி ஆய்வாளர் வில்சன் சுட்டுக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து தென் மாவட்டங்களில் போலீஸார் தீவிர சோதனை நடத்தினர்.
இந்த சோதனையில் தென்காசியைச் சேர்ந்த முகமது சக்கரியா (37), அப்துல்காதர் (31), முகமது இஸ்மாயில் (39), திருநெல்வேலி மாவட்டம் பேட்டையைச் சேர்ந்த அல்ஹபீப் (31), மேலப்பாளையத்தைச் சேர்ந்த செய்யது காஜா கரீம் நவாஸ் (38) ஆகிய 5 பேரை சந்தேகத்தின் அடிப்படையில் தென்காசி போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தினர்.
இந்நிலையில், இவர்கள் 5 பேரும் சட்டவிரோத தடுப்புச் சட்டத்தில் (UAPA) கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து காவல்துறை அதிகாரிகள் கூறும்போது, “உதவி ஆய்வாளர் வில்சன் கொலை வழக்கில் இந்த 5 பேருக்கு நேரடி தொடர்பு இல்லை எனத் தெரியவந்துள்ளது. இருப்பினும் சட்டவிரோத அமைப்புகளுடன் தொடர்பில் இருப்பது தெரியவந்ததால் ‘உபா’ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்” என்றனர்.
கடந்த 8-ம் தேதி கன்னியாகுமரி மாவட்டம் தமிழக-கேரள எல்லையில் உள்ள களியக் காவிளை சோதனைச் சாவடி யில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் (57) சுட்டுக் கொல்லப் பட்டார். அங்கிருந்து தப்பி யோடிய தவுபீக் (27), அப்துல் ஷமீம் (29) ஆகிய இருவரையும் கர்நாடக குற்றப்பிரிவு போலீ ஸார் கடந்த 14-ம் தேதி உடுப்பி ரயில் நிலையம் அருகே கைது செய்தனர்.
இந்நிலையில், உதவி ஆய்வாளர் வில்சன் சுட்டுக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து தென் மாவட்டங்களில் போலீஸார் தீவிர சோதனை நடத்தினர். இதில் தென்காசி, நெல்லை மாவட்டங்களைச் சேர்ந்த 5 பேரிடம் தீவிர விசாரணை நடைபெற்றது. விசாரணையில் அடிப்படையில் ஐவரும் சட்டவிரோத தடுப்புச் சட்டத்தில் (UAPA) கைதாகி உள்ளனர்.