க்ரைம்

சென்னையில் ஆட்டோவில்  கடத்தி ஏசி மெக்கானிக்  படுகொலை: கேளம்பாக்கம் அருகே கல் குட்டையில் உடல் மீட்பு

செய்திப்பிரிவு

சென்னை ஐஸ் ஹவுஸில் கடத்தப்பட்ட ஏசி மெக்கானிக் படுகொலை செய்யப்பட்டார். அவரின் உடல் கேளம்பாக்கம் அருகே கல் குட்டையிலிருந்து மீட்கப்பட்டுள்ளது. கொலை தொடர்பாக 3 பேரைப் பிடித்து விசாரித்து வரும் போலீஸார், மேலும் 8 பேரைத் தேடி வருகின்றனர்.

சென்னையை அடுத்த நீலாங்கரை, வெட்டுவாங்கேணியில் வசிப்பவர் குருமூர்த்தி (51). இவர் ஆட்டோ ஓட்டுநராக உள்ளார். இவரது மகன் ராம்குமார் (24). ஏசி மெக்கானிக்காகப் பணியாற்றி வந்த இவர் திருவல்லிக்கேணி பிபி குளம் 2-வது தெருவில் வசித்து வந்தார்.

கடந்த 15-ம் தேதி இரவு 11.30 மணியளவில் மது போதையில் நடுக்குப்பத்தைச் சேர்ந்த பிரேம்குமார் (25) என்பவருடன் தகராறில் ஈடுபட்டார். இதனால் பாட்டிலை உடைத்து பிரேம்குமாரின் கழுத்தில் குத்தியுள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் ராம்குமார் மீது 294 (பி) ,324, 506 (II) ஆகிய பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்த ஐஸ் ஹவுஸ் போலீஸார் அவரை ஸ்டேஷன் அழைத்து வந்தனர்.

ராம்குமார் அதிக மதுபோதையில் இருந்த காரணத்தால் அவரது தந்தை குருமூர்த்தியை அழைத்து எழுதி வாங்கி மறுநாள் காலை ஆஜர் செய்யுமாறு அனுப்பி வைத்தனர். ஆனால் மறுநாள் ராம்குமார் ஆஜராகாமல் தலைமறைவாகிவிட்டார். ஐஸ் ஹவுஸ் காவல் நிலையம் அருகிலேயே உள்ள நடேசன் சாலையில் நேற்று இரவு 10.15 மணியளவில் ராம்குமார் நின்று பேசிக்கொண்டிருந்தார்.

டாக்டர் நடேசன் சாலை, சிவா டீக்கடைக்கு எதிரில் நின்று கொண்டிருந்த போது ஆட்டோ ஒன்று அருகில் வந்து நின்றது. அதிலிருந்து திபுதிபுவென இறங்கிய சிலர், ராம்குமாரைத் தாக்கி ஆட்டோவில் கடத்திச் சென்றனர்.

இதுகுறித்துத் தகவல் அறிந்த ராம்குமாரின் தந்தை ஐஸ் ஹவுஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில், ''நடுக்குப்பம் பிரேம்குமார், கார்த்திக், ரவி ரஹீம், சுபான், அஸ்மத் மற்றும் சிலர் தனது மகனை ஆட்டோவில் கடத்திக் கொண்டு சென்றனர். லாயிட்ஸ் சாலை வழியாக நடுக்குப்பம் 5-வது தெரு அருகில் உள்ள தண்ணீர் தொட்டி முன்பு வைத்து என் மகன் ராம்குமாரைக் கத்தியால் குத்தினர். மயங்கிய நிலையில் இருந்த ராம்குமாரை மீண்டும் ஆட்டோவில் கடத்திச் சென்று விட்டனர். தனது மகனைக் கண்டுபிடித்துத் தருமாறு புகார் அளித்தார்'' என்று போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இதையடுத்து ஐஸ் ஹவுஸ் போலீஸார் 341, 147, 363, 307, 506(II) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து ராம்குமாரைக் கடத்திச் சென்றவர்களைத் தேடி வந்தனர். திருவல்லிக்கேணி நடுக்குப்பத்தைச் சேர்ந்த அப்பு (24), மாயாண்டி காலனியைச் சேர்ந்த ஜெகன் (29), பி.எம்.தர்காவைச் சேர்ந்த அருண் (30) ஆகியோரைப் பிடித்து விசாரணை நடத்தி வந்தனர்.

இதனிடையே கடத்தப்பட்ட ராம்குமார் கொலை செய்யப்பட்டு, அவரின் உடல் கேளம்பாக்கம் அருகே ஒரு கல் குட்டையில் வீசப்பட்டதாகத் தகவல் கிடைத்தது. இதனையடுத்து, ராம்குமாரின் உடலை மீட்ட போலீஸார் பிரேதப் பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலை முயற்சி வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் 1) பிரேம்குமார் (25), 2) சிவமணி(Auto Driver), 3) அப்துல் ரஹிம், 4) அஸ்மத், 5) சுபான், 6) கார்த்திக், 7) ரஞ்சித், 8) வினோத் ஆகியோர் தலைமறைவாக உள்ளனர் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாட்டிலால் குத்திய அன்றே ராம்குமாரைக் கைது செய்யாமல் எழுதி வாங்கியது, மறுநாள் தலைமறைவானவர் உயிருக்கு அச்சுறுத்தல் இருந்தும் அதுகுறித்து நுண்ணறிவுப் பிரிவு போலீஸாரோ, காவல் நிலைய போலீஸாரோ அசட்டையாக இருந்தது, போலீஸாரால் தேடப்படும் குற்றவாளி காவல் நிலையம் அருகிலேயே டீக்கடை வாசலில் நள்ளிரவு வரை அரட்டை அடித்துக்கொண்டிருந்தது குறித்து கேள்விகள் எழுந்துள்ளன.

ராம்குமாரைக் கைது செய்து சிறையில் அடைத்திருந்தால் இந்தக் கொலை நடந்திருக்க வாய்ப்பு குறைவு. எதிரிகள் அடையாளம் கண்டு கடத்த முடிகிறது. ஆனால் போலீஸாரால் பிடிக்க முடியாதது ஏன் என்பது குறித்து உயர் அதிகாரிகள் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளனர்.

மது போதையில் உள்ளவர்களை ஸ்டேஷனில் வைப்பதைத் தவிர்க்க ராம்குமாரை அவரது தந்தையுடன் அனுப்பி வைத்ததாகவும், மறுநாள் ஆஜராகக் கூறியும் அவர் தலைமறைவாகிவிட்டார் என்றும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

SCROLL FOR NEXT