தன் செல்ல மகள்களை வெளியில் அழைத்துச் சென்று சாப்பிட திண்பண்டங்கள் வாங்கிக்கொடுத்த பெற்றோர் மறுநாள் பொங்கல் அன்று அடுத்தடுத்து 2 மகள்களும் உயிரிழந்ததால் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். மரணத்திற்கான காரணம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டம், நாட்றாம்பள்ளி தாலுகா, புதுப்பேட்டை அடுத்த அம்மணாங்கோயில் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் (34). கூலித் தொழிலாளி, இவரது மனைவி பிரியா (30). இவர்களுக்கு ஜெயஸ்ரீ (5), தனுஸ்ரீ (3) என 2 மகள்கள் இருந்தனர்.
கடந்த 14-ம் தேதி மாலை பொங்கலுக்கு முந்தைய நாள் சுரேஷ் வேலை முடிந்து வீட்டுக்கு வந்ததும், தன் மகள்கள் 2 பேரையும் புதுப்பேட்டை பகுதியில் உள்ள அரசு பூங்காவுக்கு அழைத்துச்சென்றுள்ளார்.
அங்கு குழந்தைகள் ஆசைப்பட்ட தின்பண்டங்களை வாங்கி கொடுத்துள்ளார். பின்னர் சந்தோஷத்துடன் இரவு வீடு திரும்பியுள்ளனர். குழந்தைகளுக்கும், கணவர் சுரேஷுக்கும் பிரியா உப்புமா சமைத்து கொடுத்துள்ளார். பின்னர் மறுநாள் பொங்கலுக்கு சீக்கிரம் எழுந்திருக்க வேண்டும் என்று அனைவரும் படுத்துறங்கியுள்ளனர்.
நள்ளிரவு 1 மணியளவில் மூத்த மகள் ஜெயஸ்ரீ வயிறு வலிப்பதாக சுரேஷிடம் கூறியுள்ளார். அடுத்த சில நிமிடங்களில் குழந்தை ஜெயஸ்ரீ அவர் வாந்தி எடுத்துள்ளது. காலை விடிந்ததும் சுரேஷ் தன் மகள் ஜெயஸ்ரீயை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல், அதேபகுதியைச் சேர்ந்த பூசாரியிடம் அழைத்துச்சென்றுள்ளார். அவர் வேப்பிலை அடித்து விபூதி வழங்கி எல்லாம் சரியாகிவிடும் என அனுப்பியுள்ளார்.
பிறகு வீடு திரும்பியதும் குழந்தைகள் 2 பேருக்கும் காலை உணவு சாப்பிட்டுள்ளனர். பொங்கல் திருநாள் என்பதால் வீட்டில் பொங்கல் வைத்து வழிபாடு நடத்த சுரேஷ் - பிரியா ஏற்பாடுகளை செய்து வந்துள்ளனர்.
அப்போது வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்த ஜெயஸ்ரீ மீண்டும் வாந்தி எடுத்து மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக ஜெயஸ்ரீயை மீட்டு புதுப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு ஜெயஸ்ரீ கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் குழந்தை ஜெயஸ்ரீ ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
இதைகேட்டு அதிர்ச்சியடைந்த சுரேஷ் கதறி அழுதார். பிறகு குழந்தையின் உடலை வீட்டுக்கு கொண்டு வந்து இறுதி சடங்குக்கு ஏற்பாடு செய்தார். அப்போது, பகல் 2 மணியளவில் 2-வது மகள் தனுஸ்ரீயும் வாந்தி எடுத்து மயங்கி கீழே விழுந்தார். அவரையும் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனர். செல்லும்வழியிலேயே தனுஸ்ரீயும் உயிரிழந்து விட்டது.
இதையடுத்து மருத்துவர்கள் அளித்த தகவலின்பேரில் நாட்றாம்பள்ளி போலீஸார் 2 குழந்தைகளின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
குழந்தைகளின் சந்தேக மரணம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பொங்கல் தினத்தன்று ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 குழந்தைகள் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் நாட்றாம்பள்ளி பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து நாட்றாம்பள்ளி காவல் ஆய்வாளர் இருதயராஜை தொடர்பு கொண்டு கேட்டபோது, குழந்தைகள் இறப்புக்கு காரணம் என்ன வென்று இதுவரை தெரியவில்லை. பிரேத பரிசோதனை அறிக்கை 20-ம் தேதி தான் கிடைக்கும். அதன் பிறகே குழந்தைகள் உயிரிழப்புக்கான காரணம் தெரியவரும் என்றார்.