க்ரைம்

மேலாளர் திட்டியதால் திண்டுக்கல் ஆவின் ஊழியர் தற்கொலை முயற்சி: போலீஸார் விசாரணை

பி.டி.ரவிச்சந்திரன்

திண்டுக்கல்லில் ஆவின் மேலாளர் ஊழியரை தகாதவார்த்தைகளாலும், தரக்குறைவாகவும் பேசியதால், மனமுடைந்த ஊழியர் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றார்.

திண்டுக்கல்லில் உள்ள தொழிற்பேட்டையில் தமிழக அரசின் ஆவின் தொழிற்கூடம் இயங்கிவருகிறது.

இங்கு பாலில் இருந்து வெண்ணெய் எடுப்பது, நெய் தயாரிப்பது, பால் பாக்கெட்கள் தயாரிப்பது உள்ளிட்ட பணிகள் நடைபெற்றுவருகின்றன.

இந்த தொழிற்கூடத்தில் கொதிகலன் இயக்குபவராக பணிபுரிபவர் ஜஸ்டின்திரவியம். இவர் நேற்று வெண்ணெய்யை நெய்யாக மாற்றும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது பாய்லரில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

இதனால் வேலையை நிறுத்திவிட்டு மேற்பார்வையாளர் பிரேமிடம் தகவல் தெரிவித்துவிட்டு சாப்பிடச் சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த திண்டுக்கல் ஆவின் மேலாளர் தினகரபாண்டியன், பணியில் ஜஸ்டின் திரவியம் இல்லாதது கண்டு கோபமடைந்துள்ளார். அவர் வந்தவுடன் அவரை தகாத வார்த்தைகளாளும், தரக்குறைவாகவும் திட்டியதாகக் கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த ஜஸ்டின்திரவியம், ஆவின் தொழிற்கூடத்திலேயே விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றார். இதனை பணியில் இருந்த சக ஊழியர்கள் பார்த்து அவரை உடனடியாக திண்டுக்கல் அரசு மருத்துவனையில் அனுமதித்தனர்.

இங்கு ஜஸ்டின் திரவியத்திற்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டுவருகிறது. இதுகுறித்து திண்டுக்கல் நகர் மேற்கு போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

SCROLL FOR NEXT