கொலைக்குற்றம் ஒன்றில் சந்தேகப்பட்டு தேடப்பட்டு வந்த நபர் ஒருவர் மலேசியாவிற்குத் தப்பிச் சென்று அங்கு வாழ்ந்து வந்தார், இவர் பொங்கலுக்கு வருமாறு ஊரிலிருந்து வந்த அழைப்பை மகிழ்ச்சியுடன் ஏற்று திருச்சி விமான நிலையத்தில் திங்களன்று வந்து இறங்கிய போது தான் போலீஸ் வைத்த பொறியில் சிக்கப்போகிறோம் என்பதை அவர் அறிந்திருக்கவில்லை.
புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த ரகுவரன், காணாமல் போன பெண் ஒருவர் தொடர்பான வழக்கில் அனைத்து தடயங்களையும் பரிசீலித்து தமிழ்நாடு குற்றப்பிரிவு சிஐடி தனக்கு வைத்தப் பொறியை அறிந்திருக்கவில்லை. இந்தப்பெண் மாயமான வழக்கில் பிரதான குற்றவாளியாக ரகுவரன் தேடப்பட்டு வந்ததையும் ரகுவரன் அறிந்திருக்கவில்லை.
இந்நிலையில் திங்களன்று கோலாலம்பூரிலிருந்து வந்து இறங்கியவுடனேயே ஏற்கெனவெ லுக் அவுட் நோட்டீஸில் உள்ள ரகுவரனை விசாரணை அதிகாரிகள் பிடித்துக் கைது செய்தனர்.
இவரை தீவிரமாக விசாரித்ததில் ஜூலை 16, 2017-ல் காணாமல் போனதாக புகார் எழுந்த சரண்யா (27) என்ற பெண்ணை தான் சிலருடன் சேர்ந்து கொலை செய்ததை ஒப்புக் கொண்டார். சரண்யாவின் கணவர் ராஜாவின் தூண்டுதலின் பேரில் ரகுவரன் இந்தக் கொலையைச் செய்து சரண்யாவின் உடலை புதைத்ததை ஒப்புக் கொண்டார்.
இதனையடுத்து சரண்யாவை புதைத்த இடத்திற்கு ரகுவரனை அழைத்துச் சென்றனர் போலீஸார், அங்கு தோண்டப்பட்ட போது எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டது, சரண்யாவின் உறவினர்கள் சரண்யா அணிந்திருந்த புடவையையும் வெள்ளிக்கொலுசையும் அடையாளம் கண்டு அது சரண்யாவின் உடல்தான் என்று உறுதி செய்தனர்.
சரண்யா - ராஜா ஜோடிக்கு கோர்ட் விவாகரத்து அளித்திருந்தது, அதோடு இருவருக்கும் பிறந்த குழந்தை சரண்யாவுடன் இருக்க வேண்டும், வார இறுதியில் ராஜாவுடன் குழந்தை இருக்கலாம் என்று அனுமதி அளித்திருந்தது. இந்நிலையில் சரண்யா வார இறுதியில் குழந்தையை ராஜாவிடம் ஒப்படைக்க போலீஸ் நிலையம் வந்த பிறகு காணாமல் போனார். என்ன ஆனார் என்பதை உள்ளூர் போலீஸாரால் தடம் காண முடியாததால் விசாரணை கிரைம் பிராஞ்சுக்கு மாற்றப்பட்டது.
இந்நிலையில் சிஐடி ஜாபர் செய்த் நடத்திய சீராய்வுக் கூட்டத்தில், சரண்யாவின் தொலைபேசி விவரங்களை தடம் காண உத்தரவு பிறப்பித்தார். கணவனது தொலைபேசி எண்ணும் போலீஸ் கண்காணிப்புக்குள் வந்தது. அப்போதுதான் சரண்யா காணாமல் போன தினத்திலிருந்து தொலைபேசி எண் ஒன்று செயலிழந்திருந்த விவரம் கிடைத்தது.
“சந்தேகத்திற்குரிய அந்த எண் சுவிட்ச் ஆஃப் நிலையிலிருந்து செயலிழப்புச் செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் சந்தேக நபர் இன்னொரு போன் எண்ணில் தொடர்பு கொண்டு பேசியதும் தெரிய வந்தது. அந்த தொலைபேசி எண் செயலில் இருந்தது. அந்த துப்புதான் ரகுவரனை அடையாளம் காட்டியது. ஆனால் அப்போது அவர் மலேசியா சென்று விட்டிருந்தார். நாங்கள் அவரது உறவினர் சிலரை தொடர்பு கொண்டு ரகுவரனை பொங்கலுக்கு வருமாறு அழைக்கக் கோரினோம். அவர் வந்தார்” என்றார் மூத்த விசாரணை அதிகாரி ஒருவர்.
கணவர் ராஜாதான் மனைவி சரண்யாவை கொலை செய்ய ரகுவரனிடம் டீல் பேசியுள்ளார். ஜூலை 16, 2017 அன்று ரகுவரன் சரண்யாவை போலீஸ் நிலையத்திலிருந்து அழைத்துச் சென்று கணவர் ராஜாவுக்கும் இவருக்கும் சமாதானம் செய்வதாக ஆசைக் காட்டி அழைத்துச் சென்றார், ஆனால் ஆளில்லாத ஒரு இடத்துக்கு சென்ற போது அங்கு ராஜாவும் இன்னும் 3 பேரும் இருந்தனர், இவர்கள் அனைவரும் சேர்ந்து சரண்யாவைக் கொன்று தூர்ந்து போன கிணற்றில் சரண்யாவின் உடலைப் புதைத்தனர்.
தற்போது ஐந்து பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். மலேசியாவில் செட்டில் ஆன குற்றவாளியை பொங்கலுக்கு வருமாறு அழைத்து பொறி வைத்துப் பிடித்தனர் குற்றப்பிரிவு போலீஸ் துறை.