களியக்காவிளை உதவி ஆய்வாளர் வில்சன் கொலை வழக்கில் குற்றவாளிகள் தேடப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் கியூ பிரிவு போலீஸாரிடம் சிக்கிய நபர், வில்சன் கொலையில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்குத் துப்பாக்கி வாங்கிக் கொடுத்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.
களியக்காவிளை எஸ்.ஐ. வில்சனை கடந்த 8-ம் தேதி தவுபிக் மற்றும் முகமது தமீம் என்ற இருவர் சுட்டுக் கொன்றுவிட்டு தப்பிச் சென்றனர். பின்னர் கிடைத்த சிசிடிவி காட்சிகளை வைத்து இதை போலீஸார் உறுதிப்படுத்தினர்.
அவர்கள் இருவரையும் போலீஸார் தீவிரமாகத் தேடி வரும் நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன் பெங்களூருவில் கியூ பிரிவு போலீஸாரிடம் சிக்கிய முகமது ஹனிப் கான், இம்ரான் கான், முகமது சையது ஆகிய 3 பேர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் தற்போது பெங்களூருவில் இஜாஸ் பாஷா சிக்கியுள்ளார்.
இதுதவிர வில்சன் கொலையில் தப்பி ஓடிய தவுபிக்கும் பெங்களூருவில் கைதான 3 பேருக்கும் தொடர்பிருப்பதாகவும் போலீஸார் கருதுகின்றனர். ஏற்கெனவே பெங்களூருவில் கைதான 3 பேரிடம் சிக்கிய 3 பிஸ்டல்கள் எப்படி வந்தன என போலீஸார் நடத்திய விசாரணையில், இஜாஸ் பாஷா மூலம் மும்பையிலிருந்து கொண்டுவரப்பட்டதாகத் தெரியவந்தது. அவர் துப்பாக்கிகளைக் கொண்டுவரும் கருவியாகச் செயல்பட்டுள்ளார். அவருக்குத் துப்பாக்கிகளைக் கொடுத்தனுப்பியது யார் என போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோன்று காவல் உதவி ஆய்வாளர் வில்சனைச் சுட, மும்பையில் இருந்து துப்பாக்கி கொண்டு வரப்பட்டிருக்கலாம் என கியூ பிரிவு போலீஸார் கருதுகின்றனர். தமிழக கியூ பிரிவு போலீஸார் இதுவரை 9 பேரைக் கைது செய்துள்ளனர். அதில் இஜாஸ் பாஷாவும் ஒருவர். அவரை எழும்பூர் 2-வது நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கைதான இஜாஸ் பாஷாவிடமிருந்து சில துப்பாக்கிகளைக் கைப்பற்றியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. வில்சன் கொலை, அதில் ஈடுபட்ட குற்றவாளிகள், கியூ பிரிவு போலீஸரிடம் சிக்கியவர்கள் இவர்கள் இடையே உள்ள தொடர்பு தவுபிக் சிக்கும்போது முழுமையாகத் தெரியவரும்.