க்ரைம்

புதுக்கோட்டை அருகே மனைவியைக் கொன்று புதைத்துவிட்டு நாடகமாடிய கணவர்; 2 ஆண்டுகளுக்குப் பிறகு வெளிவந்த உண்மை 

கே.சுரேஷ்

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே 2 ஆண்டுகளுக்கு முன்பு மனைவியை தனது நண்பர்களின் உதவியுடன் கொலை செய்து புதைத்தது தற்போது தெரியவந்துள்ளது.

ஆலங்குடி அருகே பள்ளத்துவிடுதியைச் சேர்ந்தவர் ராஜா என்ற ரமேஷ். இவரது மனைவி சரண்யா(27). இவர்களுக்கு சுமார் 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமானது. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் தம்பதியருக்கு இடையேயான குடும்பப் பிரச்சினையில் இருவரும் சில ஆண்டுகள் பிரிந்து இருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த ஜூலை 2017-ல் சரண்யா திடீரென மாயமாகிவிட்டார். இது குறித்து ஆலங்குடி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. எனினும், கண்டுபிடிக்க முடியவில்லை.

அதன் பிறகு உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் சரண்யாவின் பெற்றோர் தரப்பில் வழக்குத் தொடரப்பட்டது.
அதில், சரண்யா மாயமான வழக்கை சிபிசிஐடி போலீஸார் விசாரணைக்கு நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து சிபிசிஐடி ஆய்வாளர் சிவா தலைமையிலான போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
அதில், ரமேஷ் தனது நண்பர்களின் உதவியுடன் சரண்யாவைக் கொலை செய்து காட்டுப் பகுதியில் புதைத்திருப்பதாகத் தெரியவந்துள்ளது.

சரண்யா

அதன் அடிப்படையில் பள்ளத்துவிடுதி அருகே சம்புரான்பட்டியில் காட்டுப் பகுதியில் ஒரு இடத்தில் பொக்லைன் இயந்திரம் மூலம் நேற்று ராஜா முன்னிலையில் பள்ளம் தோண்டப்பட்டது. அதில், குறிப்பிட்ட ஆழத்தில் பெண்ணின் எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டது.

சிபிசிஐடி துணைக் கண்காணிப்பாளர் பால்பாண்டி தலைமையிலான போலீஸார் எலும்புக்கூடு, உடைகளின் மாதிரிகளைச் சேகரித்துச் சென்றனர். "பெண் மாயமான வழக்கில் 2 ஆண்டுகளுக்குப் பிறகு தடயம் கிடைத்திருப்பதால் விசாரணையில் கிடைத்த தகவல்படி சரண்யாவைக் கொலை செய்து புதைத்திருப்பதை உறுதி செய்ய முடிகிறது.

எனினும், சில பரிசோதனைகள், முடிவுகளின் அடிப்படையிலும், விசாரணைகளின் மூலமும் இவ்வழக்கில் தொடர்புடைய அனைவரும் விரைவில் கைது செய்யப்படுவார்கள்" என சிபிசிஐடி போலீஸார் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT