தமிழக - கேரளா எல்லை களியக்காவிளை சோதனைச் சாவடியில் சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சனைச் சுட்டுக் கொன்ற பயங்கரவாதிகள் தீட்டிய கொலைத்திட்டம் குறித்து திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 8-ம் தேதி இரவு கன்னியாகுமரி களியக்காவிளை பிரதான சாலை மார்க்கெட் செக்போஸ்ட்டில் பணியில் இருந்த எஸ்.ஐ. வில்சன் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரைச் சுட்டுவிட்டு தப்பி ஓடியதாக குற்றவாளிகள் இருவரை போலீஸார் தேடி வருகின்றனர்.
போலீஸார் கைப்பற்றிய சிசிடிவி காட்சியில் அவர்கள் சாவகாசமாக நடந்து வருவதும், பின்னர் வில்சனைச் சுட்டுக் கொன்றுவிட்டுத் தப்பி ஒடுவதும் பதிவாகியிருந்தது. ஆனால், அவர்கள் கத்தியால் வில்சனை 6 இடங்களில் குத்தியிருப்பது தெரியவந்துள்ளது.
வில்சன் படுகொலைச் சம்பவம் தொடர்பாக தவுபீக், அப்துல் சமீம் ஆகிய இருவரை சிசிடிவி கேமரா பதிவுகளின் அடிப்படையில், அவர்களின் புகைப்படத்தை வெளியிட்டுத் தேடி வருகின்றனர். இது சம்பந்தமாக கேரளாவில் பத்துக்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடந்து வருகின்றது.
போலீஸார் கேரளா தவிர்த்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பலரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நேற்று போலீஸார் விசாரணையில் சில சிசிடிவி காட்சிகள் சிக்கின. அதில் குற்றவாளிகள் தவுபிக், அப்துல் சமீம் ஆகிய இருவரும் திருவனந்தபுரம் நெய்யாற்றங்கரை பகுதியில் கொலை நடப்பதற்கு ஒரு மணிநேரம் முன்பு நடமாடிய காட்சிகள் பதிவாகின.
போலீஸார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளன. இருவரும் திருவனந்தபுரத்தில் செய்யது அலி என்பவர் வீட்டில் தங்கியிருந்து கொலைக்கான சதித் திட்டத்தைத் தீட்டியுள்ளது தெரியவந்துள்ளது. செய்யது அலியின் வீடு களியக்காவிளை பகுதியிலிருந்து 200 மீட்டர் தொலைவில் உள்ளது. அவரின் வீட்டில் தங்கியிருந்துதான் சதித் திட்டம் தீட்டியுள்ளனர் என்கிற தகவலை போலீஸார் கண்டுபிடித்துள்ளனர். வில்சனைச் சுட்டுக்கொன்ற அன்று அவர்கள் ஆட்டோவில் ஏறிச் சம்பவ இடத்திற்குச் சென்றுள்ளனர்.
சோதனைச் சாவடியில் வாகனத்தை நிறுத்தியதால் வந்த தகராறு என்பதெல்லாம் இல்லை என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. ஏதோ ஒரு காரணத்திற்காக வில்சனைக் கொல்ல திட்டம் தீட்டப்பட்டு நாள், நேரம் குறிக்கப்பட்டது. இதற்காக செய்யது அலி வீட்டில் தங்கி சதித் திட்டமும் தீட்டியுள்ளனர். துப்பாக்கி, கத்தி உள்ளிட்டவற்றுடன் திட்டமிட்டே படுகொலையை நிகழ்த்தச் சென்றனர்.
கொலை நடந்த அன்று கேரளாவில் சிஐடியூ வேலை நிறுத்தத்தால் ஆட்டோக்கள் ஓடவில்லை. அதனால் ஆட்டோவில் ஏற, அதிக தொகையைக் கொடுக்க வேண்டியிருந்தது. கண்காணிப்புக் கேமராவில் சிக்கிய பதிவில் ஆட்டோவில் ஏறுவதும், கையில் பை ஒன்று வைத்திருப்பதும் பதிவாகியுள்ளது.
ஆனால், கொலை செய்துவிட்டு அவர்கள் தப்பி ஓடும்போது கைப்பை கையில் இல்லை. இடையில் யாரிடமாவது கொடுத்துவிட்டார்களா? தூக்கி எறிந்தார்களா? என போலீஸார் சந்தேகிக்கின்றனர். அன்று முழு அடைப்பு என்பதால் ஆட்டோவிற்கு 400 ரூபாய் வாடகை கொடுத்துள்ளனர். சவாரி சென்ற ஆட்டோ ஓட்டுநரைப் பிடித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், செய்யது அலியைப் பிடிக்க போலீஸார் சென்றபோது அவர் தலைமறைவாகிவிட்டார். அவரின் மனைவி ஊர் விதுர. நேற்று அங்கு சென்ற போலீஸார் நான்கு பேரைப் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். தலைமறைவாக உள்ள செய்யது அலியைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர் .
இவர் கொலைக்கு நேரடியாக உதவியதாக போலீஸார் சந்தேகப்படுகின்றனர். வில்சனைக் கொல்வதற்கான கொலைத் திட்டம் தீட்டியது முழுவதும் கேரளாவில் என்பது தெரியவந்துள்ளது. எதற்காக வில்சனைக் கொல்ல வேண்டும், அவரைக் கொல்ல ஏன் இத்தனை ஏற்பாடுகள், திட்டமிட்டுக் கொலை செய்துவிட்டு தப்பிச் செல்லும் நபர்களின் நோக்கம் தற்செயலானது அல்ல. ஆகவே, இதன் பின்னால் பெரிய சதி இருக்கிறது என போலீஸார் கருதுகின்றனர். இருவரும் பிடிபட்டால் முழு உண்மையும் வெளிவரும்.