சுட்டுக் கொல்லப்பட்ட உதவி ஆய்வாளர் வில்சன் உடலில் 6 இடங்களில் கத்திக்குத்துக்காயம் இருந்தது தெரியவந்துள்ளது. கத்தியால் குத்தியும், துப்பாக்கியால் சுட்டும் கொல்லப்பட்டுள்ளார். இரண்டு மகள்களுடன் எளிய வாழ்க்கை வாழ்ந்த வில்சனின் சோக முடிவு போலீஸாரை கலங்க வைத்துள்ளது.
நேற்றிரவு கன்னியாகுமரி களியக்காவிலை பிரதான சாலை மார்க்கெட் செக்போஸ்ட்டில் பணியில் இருந்த எஸ்.ஐ.வில்சன் சுட்டுக்கொல்லப்பட்டார். அவரை சுட்டுவிட்டு தப்பி ஓடியதாக குற்றவாளிகள் குறித்து போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. வில்சனின் உடல் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டதாக போலீஸார் நினைத்திருந்தவேளையில் பிரேத பரிசோதனை முடிவு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
துப்பாக்கி சூடு நடக்கும் முன் கொலையாளிகள் இருவரும் சாவகாசமாக நடந்து வருவதும், பின்னர் வில்சனை சுட்டுக்கொன்று விட்டு தப்பி ஒடுவதும் பதிவாகியிருந்தது. ஆனால் அவர்கள் கத்தியால் வில்சனை 6 இடங்களில் குத்தியிருப்பது தெரியவந்துள்ளது.
மார்பு, வயிறு, தொடை ஆகிய 3 இடங்களில் துப்பாக்கியால் சுடப்பட்டிருந்த நிலையில், இடுப்பில் ஆழமான கத்தி குத்து காயம் இருந்தது கண்டறியப்பட்டுள்ளது. இதைப்போல் தொடை, கை, கால் உட்பட உடலில் 5 இடங்களில் கத்தியால் கிழிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை அவர்களுடன் வில்சன் போராடும்போது அவர்கள் கத்தியால் கிழித்து பின்னர் இடுப்பில் ஆழமாக குத்தியிருக்கலாம், பின்னர் துப்பாக்கியால் 4 முறை சுட்டுள்ளனர். அதில் 3 குண்டுகள் உடலில் பாய்ந்துள்ளது.
கத்தியால் குத்தியதில் உயிர் பிழைத்துவிடக்கூடாது என்பதற்காக துப்பாக்கியால் சுட்டுவிட்டு சென்றிருக்கலாம். ஐந்துமாதத்தில் ஓய்வுப்பெறப்போகும் ஒரு சாதாரண எஸ்.ஐ ஒருவரை இவ்வளவு கொடூரமாக கொல்லவேண்டிய நோக்கம் என்ன என்பது போலீஸார் முன் உள்ள கேள்வியாக உள்ளது.
இதற்கு போலீஸ் தரப்பில் சில காரணங்களை தெரிவிக்கின்றனர். கொலையாளிகள் சென்ற சிசிடிவி காட்சிகளை ஒப்பிட்டு ஃபேஸ் டிடக்டர் வைத்து சோதனையிட்டபோது அது அபு சலீம் மற்றும் தவ்பிக் இருவர் உருவத்தோடும் ஒத்துப்போயுள்ளது. இருவரும் வில்சனை சுட்டுக்கொன்றதை போலீஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். கேரள போலீஸாரும் அதை உறுதிப்படுத்தியுள்ளனர்.
இதனிடையே இவர்கள் இருவரும் யார் என்று போலீஸார் நடத்திய விசாரணையில் சில மாதம் முன் இருவரில் ஒருவன் வீட்டில் என்.ஐஏ அதிகாரிகள் வந்து சோதனையிட்டுச் சென்றதும், அவர் கொலை முயற்சி வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்து தலைமறைவானவர் என்பதும் தெரியவந்துள்ளது.
கடந்த வாரம் பெங்களூருவில் கியூ பிராஞ்ச் போலீஸாரால் கைது செய்யப்பட்ட 3 பேருடன் இந்த நபருக்கு தொடர்புள்ளது என்றும், அவர்கள் கொடுத்த தகவலின்பேரில் போலீஸார் சென்று விசாரித்து அவர்கள் வீட்டில் கடுமையாக எச்சரித்துவிட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.
மற்றொருவன் முதல் நபருடைய கூட்டாளி என்பதும் தெரிய வந்துள்ளது.
ஒருவேளை வீட்டில் வந்து போலீஸார் விசாரித்துச் சென்ற ஆத்திரத்தில் போலீஸைக்கண்டு நாங்கள் அஞ்சவில்லை நாங்கள் யார் என்பதை காட்டுகிறோம் என்று சோதனைச்சாவடியில் தனியாக இருந்த வில்சனை கொடுமைப்படுத்தி கொன்றிருக்கலாம் எனக்கருதுகின்றனர்.
கொல்ல வரும்முன் வாகனத்தை சோதனைச்சாவடி இருக்கும் கட்டிடத்தை ஒட்டிய பள்ளிவாசலின் மறுபுறம் நிறுத்திவிட்டு சாவகாசமாக நடந்து வந்து பின்னர் கொலை செய்துவிட்டு தப்பி ஓடியுள்ளனர் என போலீஸார் கருதுகின்றனர். இவர்களுக்கும் பயங்கரவாத அமைப்புகளுக்கும் தொடர்பு ஏதும் உள்ளதா? எனவும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொலை செய்யப்பட்ட வில்சனுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். மூத்தமகள் திருமணமான நிலையில் இளையமகள் மாற்றுத்திறனாளி மகள் என்பதால் மிகவும் மன உளைச்சலில் வில்சன் வாழ்ந்து வந்துள்ளார். கடந்த மாதம் விபத்து ஒன்றில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஒருமாத விடுப்புக்குப்பின் கடந்தவாரம்தான் பணிக்கு திரும்பியுள்ளார் வில்சன்.
பட்டக்காலிலேயே படும் என்பதுபோல் துயரத்துக்குமேல் துயரமாக ஓய்வுப்பெறுவதற்கு சில மாதங்கள் உள்ள நிலையில் வில்சன் கொடூரமாக கொல்லப்பட்டுள்ளார்.
வில்சன் கொலை மற்றும் குற்றவாளிகள் குறித்து கேரள டிஜிபி ஆலோசனை நடத்தி குற்றவாளிகள் தலைக்கு ரூ.5 லட்சம் நிர்ணயித்து பிடித்துக்கொடுத்தால் ரூ.5 லட்சம் என சன்மானம் அறிவித்துள்ளார். ஒருபுறம் கேரள போலீஸ் தீவிரமாக இறங்கியுள்ள நிலையில் தமிழக போலீஸாரும் குற்றவாளியை பிடிக்க தீவிரம் காட்டி வருகின்றனர்.
வில்சனின் உடல் இன்று மார்த்தாண்டத்தில் போலீஸ் மரியாதையுடன் துப்பாக்கி குண்டுகள் முழங்க அடக்கம் செய்யப்பட்டது.