இந்து முன்னணியின் திருவள்ளூர் மாவட்டத் தலைவர் சுரேஷ்குமார் கொலை வழக்கில் தேடப்பட்டு போலீஸாரால் சன்மானம் அறிவிக்கப்பட்ட 3 பேரும் டெல்லி போலீஸாரால் இன்று கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்து முன்னணியின் திருவள்ளூர் மாவட்டத் தலைவராக இருந்தவர் சுரேஷ்குமார். இவர் கடந்த 2014 ஜூன் மாதம் 18-ம் தேதி இரவு 10.30 மணிக்கு, அம்பத்தூர் எஸ்டேட் பகுதியில் உள்ள மாவட்ட இந்து முன்னணி அலுவலகத்தை மூடிவிட்டு, வீட்டுக்கு நடந்து சென்றார். அப்போது ஒரு மர்ம கும்பல் அவரை வழிமறித்து, சரமாரியாக வெட்டிக் கொலை செய்து தப்பியது.
இதுகுறித்து, அம்பத்தூர் எஸ்டேட் காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்தனர். சுரேஷ்குமார் கொலையில் தொடர்புடைய குற்றவாளிகளைக் கைது செய்ய அப்போதைய இணை ஆணையர் சண்முகவேல் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
தனிப்படை போலீஸாரின் விசாரணையில் சுரேஷ்குமார் தனிப்பட்ட விரோதம் காரணமாக கொலை செய்யப்படவில்லை. அவர் இந்து முன்னணிக் கூட்டங்களில் பேசிய பேச்சால் ஆத்திரம் அடைந்தவர்கள் திட்டமிட்டு, கொலைத் திட்டத்தை அரங்கேற்றியது தெரியவந்தது.
கொலை தொடர்பாக பெங்களூருவில் பதுங்கி இருந்த நாகர்கோவிலைச் சேர்ந்த சையது அலி நவாஸ் (25), கன்னியாகுமரியைச் சேர்ந்த அப்துல் சமீம் (25) மற்றும் அவரது கூட்டாளி காஜா மொய்தீன் (47) உள்ளிட்ட மேலும் சிலரை போலீஸார் கைது செய்தனர்.
பின்னர் சிறையில் அடைக்கப்பட்ட அப்துல் சமீம், சையது அலி நவாஸ், காஜா மொய்தீன் ஆகியோர் ஜாமீனில் வெளியே வந்தனர். அதற்குப் பிறகு, அவர்கள் தலைமறைவாகி விட்டதாகக் கூறப்படுகிறது. போலீஸாரால் அவர்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்நிலையில், தலைமறைவாக உள்ள 3 பேர் குறித்தும் தகவல் அளிப்பவர்களுக்குத் தக்க சன்மானம் வழங்கப்படும் என சென்னை காவல் துறை அறிவித்துள்ளது. மேலும், தகவல் அளிப்பவர்களின் ரகசியம் காக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இரண்டு நாட்களுக்கு முன் பெங்களூருவில் முகமது ஹனிப் கான், இம்ரான் கான், முகமது சையது ஆகிய மூன்று பேரை தமிழக கியூ பிரிவு போலீஸார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து மூன்று துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவர்களிடம் நடத்திய விசாரணையில் தமிழகம் உள்ளிட்ட தென் இந்தியாவில் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டதும் தெரிந்தது.
முகமது ஹனிப் கான், இம்ரான் கான், முகமது சையது ஆகிய மூவரும் இந்து முன்னணி பிரமுகர் சுரேஷ்குமார் கொலையில் தொடர்புடைய காஜா மொய்தீன், சையது அலி நவாஸ், அப்துல் ஷமீம் ஆகிய மூன்று நபர்கள் வெளிநாடு தப்பிப்பதற்கு உதவியதாகவும் தகவல் தெரியவந்தது. இந்நிலையில் சென்னை போலீஸாரால் தேடப்பட்டு வந்த காஜா மொய்தீன், சையது அலி நவாஸ், அப்துல் ஷமீம் 3 பேரையும் டெல்லி போலீஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட அவர்களை அங்குள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதுகுறித்து தமிழக போலீஸாருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் டெல்லி செல்லும் தமிழக போலீஸார் டிரான்சிட் வாரண்ட் போட்டு அவர்களைத் தங்கள் பாதுகாப்பில் எடுத்து வந்து சென்னை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைப்பார்கள்.