சென்னை சூளைமேட்டில் மின் இணைப்புப்பெட்டியிலிருந்து வெடித்து சிதறி விழுந்த தீப்பொறி சாலையில் சென்ற பெண்ணின் நைட்டியில் விழுந்து தீப்பிடித்ததில் தீக்காயத்தால் பாதிக்கப்பட்டப்பெண் மருத்துவ சிகிச்சை பலனளிக்காமல் பலியானார்.
சூளைமேடு, புதிய மேற்குத் தெருவில் வசிப்பவர் ஜேம்ஸ்(39). இவரது மனைவி லீமா ரோஸ் (35). இவர் இன்று காலை வழக்கம்போல் வீட்டுக்கான மளிகை சாமான்கள் வாங்க வீட்டுக்கு அருகில் உள்ள மளிகைக்கடைக்கு நடந்துச் சென்றுள்ளார். அவர் அப்போது நைலான் நைட்டி அணிந்திருந்தார்.
வீட்டுக்கு அருகில் உள்ள ஆண்டவர் தெரு ஜங்க்ஷன் அருகே லீமாரோஸ் நடந்துச் செல்லும்போது அருகிலிருந்த மின் இணைப்புப்பெட்டியிலிருந்த கேபிளிலிருந்து திடீரென வெடித்து தீப்பொறி பறந்து சாலையில் விழுந்துள்ளது. இதில் சாலையில் நடந்துச் சென்றுள்ள லீமா ரோஸ் மீது தீப்பொறிகள் விழ அவர் அணிந்திருந்த நைட்டி நைலான் துணி என்பதால் தீ வேகமாக அந்த உடையில் பற்றிக் கொண்டது.
இதனால் அதிர்ச்சியடைந்த அவர் ஓட காற்றின் வேகத்திலும், நைலான் துணி என்பதாலும் தீ மேலும் எரிந்து நைலான் துணிகள் அவர் உடலில் ஒட்டிக்கொண்டது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவர் உடலில் பற்றி எரிந்த தீயை அணைத்து அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கீழ்ப்பாக்கம் அரசு பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
லீமாரோஸ் உடலில் தீ அதிகம் பரவியதால் அவரது உடலில் 79 சதவீதம் தீக்காயம் ஏற்பட்டது. இதனால் அவர் ஆபத்தான நிலையை கடக்காமலே சிகிச்சைப்பெற்றுவந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் லீமா ரோஸ் மதியம் உயிரிழந்தார். சாலையில் சாதாரணமாக நடந்துச் சென்ற பெண் மின்சார கேபிள் வெடித்ததால் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி உயிரிழந்தது அவர் வசிக்கும் பகுதில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து தீயணைப்புத்துறை அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில் “பொதுவாக அலங்காரத்துக்காக நைலான் ஆடைகளை பெண்கள் அணிகிறார்கள். அதை அணிந்துக்கொண்டு சமையல் போன்ற வேலைகளிலும் ஈடுபடுகிறார்கள். நம்மூர் சீதோஷன் நிலைக்கு நைலான் ஆடைகள் தேவையற்ற ஒன்று. தீப்பிடிக்கும்போது உயிருக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடியவையும்கூட.
காட்டன் துணிகள் அல்லது காட்டன் கலப்பு துணிகளை பயன்படுத்துவது பெரும்பாலும் பாதுகாப்பு. இந்த விபத்திலும் நைலான் துணியே உயிரிழப்புக்கு காரணமாக அமைந்துள்ளது. காட்டன் துணியாக இருந்தால் தீக்காயம் இந்த அளவுக்கு இருந்திருக்காது, காயம் மட்டுமே ஏற்பட்டிருக்கும். அதேப்போன்று உடலில் தீப்பிடித்தால் பயந்துபோய் ஓடக்கூடாது.
அது காற்றில் உள்ள ஆக்சிஜனை அதிகமாக எடுத்து மேலும் தீ பற்றி எரிய காரணமாக அமையும். தரையில் படுத்து உருண்டுவிட்டால் ஆக்சிஜன் தடைப்பட்டு தீ அணைந்துவிடும்.
பக்கத்தில் இருப்பவர்களும் கனமான போர்வை, கோணிப்பை போன்றவற்றை தீப்பிடித்தவர்மீது போர்த்தி தரையில் உருளவிட்டால் தீக்காயத்துடன் அவரை பிழைக்க வைக்கலாம்”. என்று தெரிவித்தார்.