விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே நேற்று இரவு இரு தரப்பினர் இடையே கோஷ்டி மோதல் ஏற்பட்டது. போலீஸார் துப்பாக்கியால் சுட்டு கலவரத்தை கட்டுப்படுத்தி அத்துடன் இது தொடர்பாக 40 க்கும் மேற்பட்டோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அருப்புக்கோட்டை அருகே உள்ள செங்குளம் கிராமத்தைச் சேர்ந்த சிலர் கார்களில் மதுரை சென்று கட்டபொம்மன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்துள்ளனர். பின்னர் அங்கிருந்து பரளச்சி வழியாக ஊர் திரும்பியுள்ளனர்.
அப்பொழுது பரளச்சி காவல் நிலையம் அருகே வந்த போது அப்பகுதியைச் சேர்ந்த சிலர் கார்களின் மீது கல்வீசி தாக்கியுள்ளனர். இதில் கார்களில் வந்த சுமார் 10 பேர் காயம் அடைந்தனர்.
அதையடுத்து செங்குளம் கிராமத்தினருக்கும் பரளச்சியில் வசிக்கும் குறிப்பிட்ட சமுதாயத்தினருக்கும் இடையே நேற்று இரவு திடீர் மோதலால் அப்பகுதியில் கலவரம் ஏற்பட்டது.
தகவலறிந்த அருப்புக்கோட்டை டிஎஸ்பி வெங்கடேஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர். கலவரத்தை கட்டுப்படுத்த முடியாததால் டிஎஸ்பி வெங்கடேஷ் துப்பாக்கியால் 2 முறை வானத்தை நோக்கிச் சுட்டு கலவரத்தை கட்டுப்படுத்தியதாக கூறப்படுகிறது.
அதையடுத்து எஸ்.பி. பெருமாள், மதுரை சரக டிஐஜி ஆனிவிஜயா ஆகியோரும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார். இரவு தொடர்ந்து பதற்றம் நிலவியதால் பரளச்சி மற்றும் செங்குளம் பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
அதைத்தொடர்ந்து இன்று காலை கீழ பரளச்சி சேர்ந்த 24 பேரையும், செங்குளத்தைச் சேர்ந்த 23 பேரையும் போலீஸார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் பரளச்சி, செங்குளம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் விருதுநகர் மற்றும் ராமநாதபுரம் மாவட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.