பிரதமர், உள்துறை அமைச்சர் குறித்து சர்ச்சையாகப் பேசிய நெல்லை கண்ணனைக் கைது செய்யவேண்டும் என கடற்கரை காமராஜர் சாலையில் நேற்று போராட்டம் நடத்திய எச்.ராஜா, இல.கணேசன் உள்ளிட்ட பாஜகவினர் 311 பேர் மீது 3 பிரிவுகளின்கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக எஸ்டிபிஐ கட்சியினர் நடத்திய பொதுக்கூட்டத்தில் பிரதமர், உள்துறை அமைச்சர் பாதுகாப்பு குறித்து பேச்சாளர் நெல்லை கண்ணன் சர்ச்சையாகப் பேசியது பாஜக மற்றும் இந்து அமைப்பினர் இடையே எதிர்ப்பலையை ஏற்படுத்தியது. அவர் வீட்டுமுன் காலையில் பாஜகவினர் போராட்டம் நடத்தினர்.
அதற்கு முன் பாஜகவினர் அளித்த புகாரின் பேரில் போலீஸார், நெல்லை கண்ணன் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். அவர் கைது செய்யப்படலாம் என்கிற நிலையில் மருத்துவமனையில் உடல் நலக்குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்ட நெல்லை கண்ணன் பின்னர் பெரம்பலூரில் தனியார் விடுதியில் வைத்து நேற்று கைது செய்யப்பட்டார்.
நெல்லை கண்ணனைக் கைது செய்யாவிட்டால் இல.கணேசன், பொன்.ராதாகிருஷ்ணன், சி.பி.ராதாகிருஷ்ணன் ஆகியோருடன் இணைந்து ஜன.01 மாலை கடற்கரையில் தர்ணா போராட்டம் நடத்த உள்ளோம் என பாஜக தேசியச் செயலாளர் எச்.ராஜா டிச.31 அன்று ட்விட்டரில் பதிவு செய்திருந்தார்.
ஆனால், மதியம் வரை கைது செய்யப்படாததால் நேற்று மாலை எச்.ராஜா, பொன் ராதாகிருஷ்ணன், கே.பி.ராதாகிருஷ்ணன், இல.கணேசன் உள்ளிட்ட 300 க்கும் மேற்பட்டோர் கடற்கரையில் தர்ணா போராட்டம் நடத்தச் சென்றனர்.
அவர்களை போலீஸார் தடுத்ததால் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். பின்னர் போலீஸார் அவர்களைக் கைது செய்தனர். இதேபோன்று ராயப்பேட்டை மணிக்கூண்டு அருகே வானதி சீனிவாசன் சில தொண்டர்களுடன் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினார். அவர்களையும் போலீஸார் கைது செய்து மாலையில் விடுவித்தனர்.
இந்நிலையில் போராட்டம் நடத்திய எச்.ராஜா, இல.கணேசன், பொன்.ராதாகிருஷ்ணன், கே.பி.ராதாகிருஷ்ணன், வானதி சீனிவாசன் உள்ளிட்ட பாஜகவினர் 311 பேர் மீது சென்னை போலீஸார் ஐபிசி பிரிவு 143 (அனுமதியின்றி கூடுதல்) 145 (போலீஸார் கலைந்து செல்ல உத்தரவிட்டும் கூடியிருத்தல்) 341 (முறையற்ற முறையில் தடுத்தல்) ஆகிய பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.