க்ரைம்

கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை-கொலை வழக்கு: குற்றவாளிக்கு 3 மணிக்கு தண்டனை அறிவிப்பு; மற்றொரு நபரும் சிக்குகிறார்

செய்திப்பிரிவு

கோவை பன்னிமடையில் 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளி சந்தோஷ்குமாருக்கு இன்று மாலை 3 மணிக்கு தண்டனை வழங்கப்பட உள்ளது. இதனிடையே வழக்கில் திடீர் திருப்பமாக மற்றொரு நபருக்கும் தொடர்புள்ளது தெரியவந்துள்ளது.

கோவை பன்னிமடை அருகே உள்ள திப்பனூர் பகுதியை சேர்ந்த அரசு பள்ளியில் 1ம் வகுப்பு படித்து வந்த 7 வயது சிறுமி கடந்த மார்ச் 25-ம் தேதி மாயமானர். பின்னர் அடுத்த நாளே வீட்டின் பின்புறத்தில் துணியால் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் சடலமாக சிறுமி கண்டெடுக்கப்பட்டார்.

பிரேத பரிசோதனையில் சிறுமி பாலியல் வன்கொடுமைkகு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது உறுதியானது. சிறுமியின் கொலை தொடர்பாக 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசராணை நடைபெற்று வந்தது. இந்த சம்பவம் பெரும் அதிர்வை ஏற்படுத்திய நிலையில், சிறுமி கொலை நடந்த 6 நாட்களுக்கு பிறகு தொண்டாமுத்தூரைச் சேர்ந்த சந்தோஷ் குமார் என்பவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

வழக்கு கோவையில் உள்ள மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் அனைத்து தரப்பு வாதங்கள் அனைத்தும் நிறைவடைந்தால் தீர்ப்பு இன்று வெளியாக இருந்தது. இந்நிலையில் இந்த வழக்கில் திடீர் திருப்பமாக சிறுமியை வன்கொடுமை செய்ததில் மேலும் ஒருவருக்கு தொடர்பு இருப்பதாக டிஎன்ஏ சோதனையில் நேற்று தெரியவந்து உள்ளது.

இதையெடுத்து சிறுமியின் தாய் தனது மகள் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கை மீண்டும் விசாரிக்க கோரி கோவை மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் வழக்கு புதிய வழக்கு ஒன்றை தொடர்ந்தார். இந்நிலையில் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது நீதிபதிகள் சந்தோஷ்குமார் குற்றவாளி என தீர்ப்பளித்தனர்.

சந்தோஷ்குமார் தண்டனை குறித்து 3 மணியளவில் அறிவிக்கப்படும் என நீதிபதிகள் கூறியுள்ளனர். சிறுமியின் தாயார் தரப்பு வழக்கறிஞர் இதுகுறித்து கூறுகையில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் மறு விசாரணை செய்யக்கோரி உயிரிழந்த சிறுமியின் தாயார் செய்த மனு மீது நாளை உத்தரவிட வாய்ப்புள்ளது.

குற்றத்தில் தொடர்புடைய விடுபட்ட நபரை கண்டுபிடித்து தண்டிக்க வேண்டும் என்றே விசாரணை கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதே தவிர, இந்த தீர்ப்பை தள்ளி வைக்க வேண்டும் என்பதற்கில்லை.

இந்தவழக்கில் சந்தோஷ்குமாருக்கு மதியம் 3 மணிக்கு அளிக்கப்படும் தண்டனையை தமிழகம் முழுதும் அனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்துள்ளனர். அதேப்போன்று மற்றொரு நபர் சிக்கும்பட்சத்தில் அவருக்கும் அதே தண்டனை கிடைக்கவே வாய்ப்புள்ளது.

SCROLL FOR NEXT