கிறிஸ்துமஸ் தினத்தை ஒட்டி நள்ளிரவில் சென்னை முழுதும் பைக் ரேஸில் ஈடுபட்டவர்களை போலீஸார் வளைத்துப்பிடித்து வாகனங்களை பறிமுதல் செய்து அனைவர்மீதும் வழக்குப்பதிவு செய்தனர்.
சென்னையில் பைக் ரேஸ் என்பது சாதாரணமாக நடக்கும் நிகழ்வாக மாறிவருகிறது. சட்டம் ஒழுங்கு போலீஸார் அளவுக்கு போக்குவரத்து போலீஸார் இதில் கண்டுக்கொள்ளாமல் விடுவதால் நாளுக்கு நாள் சென்னையில் பட்டப்பகலிலேயே ரேஸ் ஓட்டுவது, தாறுமாறாக ஓட்டுவது நடக்கிறது.
புத்தாண்டு உள்ளிட்ட பண்டிகை நாட்களில் அதிக அளவில் ஒன்றுச் சேர்ந்து பைக் ரேஸ் போவது வாடிக்கையாக உள்ளது. இதில் விபத்தில் சிக்கி அப்பாவிகளும் பலியாகும் நிகழ்வும் நடக்கிறது. இதனால் போலீஸார் இதுபோன்ற நேரங்களில் எச்சரிக்கையாக வாகன தணிக்கை, சாலைத்தடுப்புகள் அமைத்து பிடிப்பது போன்ற காரியங்களில் ஈடுபடுகின்றனர்.
சென்னையில் இதுபோன்று நடக்கும் பைக் ரேஸ் குறித்த புகார்கள் போலீஸாருக்கு வந்தவண்ணம் இருந்தன. சென்னை சாலைகளில் மோட்டார் சைக்கிள் பந்தயங்களில் ஈடுபடுபவர்கள் மற்றும் அதி வேகமாக வாகனங்களை ஓட்டுபவர்களை தடுக்கவும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும் சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை மற்றும் சட்டம் ஒழுங்கு காவல் துறை இணைந்து சிறப்பு வாகன தணிக்கையை நேற்று இரவு மேற்கொண்டது.
கைப்பற்றப்பட்ட பைக்குகள்
சென்னை முழுதும் குறிப்பாக சென்னை கடற்கரை காமராஜர் சாலை, அண்ணாசாலை, ஜிஎஸ்டி சாலை, சர்தார் பட்டேல் சாலை, வடசென்னையில் பல இடங்கள், மதுரவாயல் பைபாஸ் சாலை உள்ளிட்ட இடங்களில் போலீஸார் நேற்று இரவு தொடர்ந்த அதிரடி நடவடிக்கையில் அதிவேகமாக வாகனம் ஓட்டிய, அலட்சியமாக, மற்றவர்களை காயப்படுத்தும் விபத்து ஏற்படுத்தும்வண்ணம் வாகனம் ஓட்டிய 158 பேரை போலீஸார் மடக்கிப்பிடித்தனர்.
அவர்கள் மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதில் 126 நபர்கள் மீது ஐபிசி பிரிவு 336 (அடுத்தவர் உயிருக்கும் உடமைக்கும் பாதிப்பு ஏற்படும் வண்ணம் அலட்சியமாக வாகனத்தை ஓட்டுவது) மற்றும் 114 (தண்டனைக்குரிய குற்றத்தை செய்பவருடன் உடனிருந்து தானும் அதே செயலுக்கு துணையிருத்தல்) கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மற்றும் 32 நபர்கள் மீது மோட்டார் வாகன சட்டத்தின்படி அதிக வேகமாக ஓட்டுவது, அலட்சியமாக வாகனத்தை இயக்குவது, ரேஸ் ஓட்டுவதுச் ஆகிய பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
வருகின்ற புத்தாண்டு விழா விபத்தில்லா நாட்களாக இருப்பதற்காக இந்த நடவடிக்கை அடுத்து வரும் நாட்களிலும் தொடரும் என போலீஸார் தெரிவித்துள்ளனர்.
சென்னையில் எப்போதும் இளைஞர்கள் மட்டுமே நள்ளிரவு ரேஸில் ஈடுபடுவது வாடிக்கை. சமீப காலமாக இளம்பெண்களும் அவர்களுடன் அமர்ந்துக்கொண்டு ஹாலிவுட் பாணியில் சியர்-அப் செய்துக்கொண்டு செல்வது அதிகரித்து வருகிறது.
கார்களில் சினிமா பாணியில் ஜன்னலில் அமர்ந்துக்கொண்டு பெண்கள் சாலைகளில் சென்றதும், அவர்களை பின் தொடர்ந்து வேகமாக இளைஞர்கள் மோட்டார் சைக்கிளில் சென்றதும் வேதனையான காட்சி என தெரிவித்த போலீஸார் இது விபத்தை விலைகொடுத்து வாங்கும் செயலாகும் என தெரிவித்துள்ளனர்.