க்ரைம்

பிரபல துணிக்கடையில் பெண் வாடிக்கையாளரின் பர்ஸ் திருட்டு: சிசிடிவியில் சிக்கிய இளம்பெண் கைது 

செய்திப்பிரிவு

சென்னை புரசைவாக்கம் பகுதியில் அமைந்துள்ள பிரபல துணிக்கடையில் துணி எடுத்துக் கொண்டிருந்த பெண்ணிடம் பிக் பாக்கெட் அடித்த இளம்பெண் சிசிடிவி காட்சியின் மூலம் சிக்கினார்.

புரசைவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் யமுனா (54). இவர் புரசையில் உள்ள பிரபல துணிக்கடையில் துணிகளை எடுத்தார். அங்குமிங்கும் அலைந்து துணிகளை எடுத்தபின் பில் போட கவுன்ட்டர் பக்கம் வந்தார். பில்லுக்குப் பணம் கட்ட கைப்பைக்குள் இருந்த பர்ஸை எடுக்கத் தேடியபோது திடுக்கிட்டுப்போனார்.

காரணம் கைப்பைக்குள் இருந்த பர்ஸைக் காணவில்லை. வண்டிக்குப் பணம் கொடுத்துவிட்டு கடைக்குள் நுழையும் போது கைப்பைக்குள்தானே பர்ஸை வைத்தோம். அதற்குள் காணாமல் போகிறது என்றால் கடைக்குள்ளேயே யாரோ திருடியுள்ளனர் என்று முடிவு செய்த அவர், கல்லாவில் இருந்தவர்களிடம் நடந்ததைக் கூறினார்.

உடனடியாக கல்லாவில் இருந்தவர்கள் எங்கெங்கெல்லாம் துணி எடுத்தீர்கள் என ஒவ்வொரு இடமாகக் கேட்டு அங்குள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது இளம்பெண் ஒருவர், யமுனா துணி எடுக்கும் நேரம் அவரை ஒட்டி, ஒட்டி நிற்பதும் அவரும் துணிகளைப் பார்ப்பது போன்று பாவனை செய்து யமுனா அசந்த நேரத்தில் கைவிட்டு பர்ஸை எடுப்பதும் பதிவாகியிருந்தது.

பர்ஸைத் திருடிய அந்தப் பெண் அதே கடைக்குள் இருப்பதையும் கண்டுபிடித்தார்கள். உடனடியாக கடை ஊழியர்கள் அவரைப் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர். யமுனா அளித்த புகாரின் பேரில், அந்தப் பெண்ணைக் கைது செய்த போலீஸார். அவர் திருடிய 2 ஆயிரத்து 770 ரூபாய் பணத்தைப் பறிமுதல் செய்தனர்.

SCROLL FOR NEXT