க்ரைம்

3 மாவட்டங்களில் 165-க்கும் மேற்பட்ட இடங்களில் கைவரிசை: குடும்பத்தோடு திருட்டு தொழிலில் ஈடுபட்ட 4 பேர் கைது- இரண்டேகால் கிலோ நகைகள் மீட்பு

த.அசோக் குமார்

தென்காசி, திருநெல்வேலி, மதுரை ஆகிய 3 மாவட்டங்களில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி குடும்பத்தோடு திருட்டு தொழிலில் ஈடுபட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து இரண்டேகால் கிலோ தங்க நகைகள் மீட்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுகுணாசிங் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தென்காசி மாவட்டம் தொடங்கப்பட்டதைத் தொடர்ந்து, மாவட்டத்தில் உள்ள திருட்டு வழக்குகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இதில், கடந்த 2016-ம் ஆண்டு முதல் தற்போது வரை பல்வேறு இடங்களில் வீடுகளில் தூங்கும் பெண்களிடம் நகை திருட்டு சம்பவங்கள் கண்டுபிடிக்கப்படாமல் இருந்தன.

தென்காசி உட்கோட்டத்தில் மட்டும் 70-க்கும் மேற்பட்ட வழக்குகளில் குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியாமல் இருந்தது. குற்றவாளிகளை கண்டுபிடித்து கைது செய்ய தென்காசி துணை காவல் கண்காணிப்பாளர் கோகுலகிருஷ்ணன், காவல் ஆய்வாளர்கள் ஆடிவேல், சுரேஷ்குமார் ஆகியோர் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

இந்த தனிப்படை போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். தென்காசி உட்கோட்டம் மட்டுமின்றி, திருநெல்வேலி, மதுரை மாவட்டங்களிலும் வீட்டில் தூங்கும் பெண்களிடம் நகை பறிப்பு தொடர்பாக 165-க்கும் மேற்பட்ட வழக்குகளில் குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியாமல் இருந்தது தெரியவந்தது.

இந்த வழக்குகளில் தனிப்படை போலீஸாருக்கு பல்வேறு தகவல்கள் கிடைத்தன. சனிக்கிழமை (20-ம் தேதி) மாலையில் 2 கிலோ 200 கிராம் நகையை மாற்றுவதற்காக

சிலர் தென்காசிக்கு கொண்டு வருவதாக ரகசிய தகவல் தனிப்படை போலீஸாருக்கு கிடைத்தது.

இதையடுத்து, அந்த நபர்களைப் பிடித்து விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில் அவர்கள் தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள புங்கம்பட்டியைச் சேர்ந்த முருகன் (35), அவரது தம்பி சுரேஷ் (32), தந்தை துரை (60), தாய் ராஜபொன்னம்மாள் (55) என்பது தெரியவந்தது.

இவர்கள், தென்காசி, திருநெல்வேலி, மதுரை மாவட்டங்களில் 165 இடங்களில் வீடுகளில் தூங்கும் பெண்களிடம் நகை திருடியது தெரியவந்தது. வீடுகளில் புகுந்து முருகன் திருடியுள்ளார். அவருக்கு உதவியாக அவரது தம்பி சுரேஷ் இருந்துள்ளார். திருடிய நகைகளை விற்பனை செய்ய அவர்களது பெற்றோர் உதவியுள்ளனர்.

இவர்கள், யாருக்கும் சந்தேகம் வராமல் இருக்க திருடும் பகுதிகளில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி, அந்த பகுதிகளில் திருடியுள்ளனர்.

தென்காசி மாவட்டத்தில் 4 வீடுகள், திருநெல்வேலி, ரெட்டியார்பட்டியில் ஒரு வீடு, மதுரை அருகே திருமங்கலத்தில் ஒரு வீடு வாடகைக்கு எடுத்து, தங்கியிருந்து, குடும்பத்தோடு திருட்டில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டனர்.

இவர்கள் 4 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். தென்காசி உட்கோட்ட பகுதிகளில் 78 இடங்களில் திருடிய 2 கிலோ 200 கிராம் நகைகள் மீட்கப்பட்டுள்ளன.

இரவில் வீட்டில் தூங்கும் பெண்களிடம் இருந்து மட்டுமே திருட்டில் ஈடுபட்டுள்ளனர். காற்றுக்காக வீட்டு கதவை திறந்து வைத்துவிட்டு யாரெல்லாம் தூங்குகிறார்கள், கதவை வெளிப்புறமாக இருந்தும் எளிதாக திறக்கும் வகையில் உள்ள வீடுகள், மாடிப்படி வழியாக வீட்டுக்குள் செல்லும் வகையில் உள்ள வீடுகளை நோட்டம் விட்டு இரவு நேரங்களில் திருடியுள்ளனர்.

மேலும், திருடச் செல்வதற்கு இருசக்கர வாகனங்களையும் பல்வேறு இடங்களில் திருடியுள்ளனர். அவ்வாறு திருடிச் செல்லும் வாகனங்களை திருடச் செல்வதற்கு பயன்படுத்திவிட்டு, விவசாய கிணறுகளில் வீசிவிட்டுச் சென்றுள்ளனர்.

மற்ற மாவட்டங்களில் நடந்த திருட்டுச் சம்பவங்கள் தொடர்பாக சம்பந்தப்பட்ட போலீஸார் குற்றவாளிகளைக் காவலில் எடுத்து விசாரணை நடத்துவார்கள்” என்றார்.

SCROLL FOR NEXT