மது போதையால் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்ததால் தாயார் பிரிந்து சென்றார். அவரைப் பலமுறை வீட்டுக்கு அழைத்தும் திரும்ப வர மறுத்ததால் மனமுடைந்த மகன் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார்.
சென்னை, அபிராமபுரம், குடிசை மாற்று வாரியக் குடியிருப்பில் வசிப்பவர் குமார் (எ) பிரியாணி குமார் (31). அபிராமபுரம் பேருந்து நிலையம் அருகில், இரண்டு சக்கர வாகனம் பழுதுபார்க்கும் கடையில் மெக்கானிக்காக வேலை பார்த்து வருகிறார்.
இவருக்கு மதுப்பழக்கம் இருப்பதால் மது அருந்திவிட்டு வந்து அக்கம் பக்கத்தில் சண்டைபோடுவது, தாயாரிடம் வம்பிழுப்பது, தகராறு செய்வது என்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். குடிப்பழக்கத்தை விட்டுவிடும்படி அவரது தாயார் பலமுறை மகன் குமாரிடம் கூறி வந்துள்ளார்.
ஆனாலும் குமார் மதுப்பழக்கத்தை விடுவதாக இல்லை. தாயாரிடமும் தகராறு செய்வது அதிகரித்து வந்தது. ஒரு கட்டத்தில் மகனின் தொல்லை பொறுக்கமுடியாமல் குமாரின் தாயார் அவரை விட்டுப் பிரிந்து கண்ணகி நகருக்குக் குடிபோய்விட்டார்.
தாயாரைப் பிரிந்து குமாரால் இருக்க முடியவில்லை. பல முறை தாயைச் சந்தித்து தன்னுடன் வந்துவிடும்படி கேட்டுள்ளார். ஆனால் மதுப்பழக்கத்தை விட்டால் வருவதாக குமாரின் தாயார் தெரிவித்துள்ளார்.
தாய் தன்னைப் புறக்கணித்ததால் மன வருத்தத்தில் இருந்த குமார் அதே வருத்தத்துடன் நேற்றிரவு மது அருந்தியுள்ளார். மதுபோதையில் தான் வேலை செய்யும் இடத்துக்கு வந்த அவர், அங்கிருந்த பெட்ரோல் கேனை எடுத்து தன் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்துக்கொண்டார். அவர் அலறி துடித்ததைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் தீயை அணைத்து அவரைக் காப்பாற்றினர்.
பின்னர் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு பொது மருத்துவமனையில் குமாரை அனுமதித்தனர். அவருக்கு 48 சதவீதம் தீக்காயம் உள்ள நிலையில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக அபிராமபுரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.