கைதான இளைஞர் அசாருதீன் 
க்ரைம்

என்று தணியும் இந்த வெளிநாட்டு மோகம்?- வேலைக்காக பணத்தை இழந்த மதுரை இளைஞர்கள்; லாபத்துக்காக சொத்தை இழந்த தொழிலதிபர் 

செய்திப்பிரிவு

கனடாவில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி மதுரையைச் சேர்ந்த இளைஞர்களிடம் ரூ.2 கோடி வரை மோசடி செய்ததாக கோவையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மதுரை திருவள்ளுவர் நகரைச் சேர்ந்தவர் சிவக்குமார். இவர் துரையிலிருந்து குவைத், சிங்கப்பூர், மலேசியா, மாலத்தீவு, துபாய், சவுதி, ஓமன் போன்ற வெளிநாடுகளுக்கு வேலைக்கு ஆட்களை அனுப்பும் கன்சல்டென்சி தொழிலை செய்து வருகிறார்.

இந்நிலையில், சிவக்குமாரிடம் கடந்த 2016-ம் ஆண்டு கனடா செல்ல வேண்டும் எனக்கூறி கோயம்புத்தூரைச் சேர்ந்த சையது அசாருதீன் என்ற இளைஞர் அறிமுகமாகியுள்ளார்.

சிவக்குமார் அசாருதீனை கனடா அனுப்புவதற்கு காலதாமதமாகியுள்ளது. திடீரென்று ஒருநாள் சிவக்குமாரை கனடா நாட்டு எண்ணில் இருந்து தொடர்பு கொண்ட அசாருதீன் தான் தனது உறவினரான வழக்கறிஞர் அப்துல் கசாப் மூலம் கனடாவில் பிரபல கார் நிறுவனத்தில் பணிக்குச் சேர்ந்துவிட்டதாக கூறியுள்ளார்.

மேலும் தனது உறவினருக்கு பிரபல தொழில் நிறுவனங்களான பிஎம்டபிள்யூ, வால்மார்ட் உள்ளிட்ட நிறுவனங்களுடன் தொடர்பு உள்ளதாகவும். அதைப் பயன்படுத்தியே அங்கு வேலை வாங்கியதாகவும் கூறியுள்ளார்.

அதுமட்டுமல்லாது தனது உறவினர் வழக்கறிஞர் கசாப் மூலம் சிவக்குமாரை அணுகும் இளைஞர்களுக்கும் தன்னால் கனடாவில் ஒர்க் பெர்மிட் வாங்கித்தர இயலும் எனக் கூறியுள்ளார். அவ்வாறு கனடாவிற்கு ஆட்களை அனுப்பும் பட்சத்தில் அதற்கு கமிஷனாக ரூ.50,000 முதல் ரூ.1 லட்சம் வரை சிவக்குமார் எடுத்துக்கொள்ளலாம் எனவும் ஆசை வார்த்தைகள் கூறியுள்ளார்.

சிவக்குமாரும் பணம் சம்பாதிக்கலாம் என்ற ஆசையில் இதற்கு ஒப்புதல் அளித்துள்ளார். அங்குதான் அசாருதீன் தனது ஆட்டத்தை ஆரம்பித்திருக்கிறார். முதற்கட்டமாக, தனது வங்கி கணக்கிற்கு ரூ.20 லட்சம் பணம் அனுப்பச் சொல்லியுள்ளார்

அசாருதீன். அவரை நம்பிய சிவக்குமார் வெளிநாடு செல்ல ஆர்வமாக இருந்த 30-க்கும் மேற்பட்ட இளைஞர்களிடம் இருந்து 30 லட்ச ரூபாயை வசூல் செய்து அதை தனது வங்கிக்கணக்கு மூலம் அசாருதீனின் வங்கிக்கணக்குக்கு அனுப்பியுள்ளார். இதேபோல் தொடர்ந்து அசாருதீன் வங்கிக் கணக்கிற்கும், அவருடைய சகோதரி வங்கிக் கணக்கிற்கும் அனுப்பியுள்ளார்.இது ஒரு கட்டத்தில் ரூ. 2 கோடியை எட்டியது. ஆனால், அசாருதீனோ சொன்னபடி ஒருவரை கூட வெளிநாட்டுக்கு அழைக்கவில்லை.

இதற்கிடையில் பணம் கொடுத்த மதுரை இளைஞர்கள் சிவக்குமாரிடம் பணத்தை திரும்பத் தர வற்புறுத்தியுள்ளனர். நெருக்கடியை சமாளிக்க முடியாத சிவக்குமார் தனது சொத்துக்களை விற்றும் குடும்ப உறுப்பினர்களிடமிருந்து கடன் வாங்கியும் பிரச்சினை செய்த இளைஞர்களுக்கு மட்டும் பணத்தைத் திரும்பக் கொடுத்துள்ளார்.

மேலும் நெருக்கடி வலுக்கவே அசாருதீனைத் தொடர்பு கொண்டுள்ளார். ஆனால் இம்முறை அசாருதீனின் பேச்சு வித்தியாசமாக இருந்துள்ளது.
சிவக்குமாரிடம் ஏமாற்றியதை பகிரங்கமாகவே ஒப்புக் கொண்ட அசாருதீன் போலீஸுக்கு சென்றால் கொலை செய்துவிடுவேன் என்றும் மிரட்டியுள்ளார்.

இதுகுறித்து மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார் சிவக்குமார். போலீஸ் விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

இளைஞர் அசாருதீன் கனடாவிற்கு செல்லாமல் கோயம்புத்தூரில் இருந்தது அம்பலமானது. மேலும், சிவக்குமாரை ஏமாற்றி வாங்கிய பணத்தை வைத்து லம்போகினி, டுக்காட்டி உள்ளிட்ட விலை உயர்ந்த வாகனங்களை அசாருதீன் சொகுசு வாழ்க்கை வாழ்ந்ததும் தெரியவந்தது.
இதனையடுத்து இளைஞர் அசாருதீனை போலீஸார் கைது செய்தனர்.

வெளிநாட்டு மோகத்தால் தொடர்ந்து இளைஞர்கள் பணத்தை இழப்பது வாடிக்கையாகி வருவதை சுட்டிக்காட்டிய மாநகர காவல்துறையினர் அரசு அங்கீகரித்துள்ள முகவர்கள் மூலமாக மட்டுமே வெளிநாட்டு வேலைகளுக்கு முயற்சிக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர்.

SCROLL FOR NEXT