தேனி மாவட்டம் பொன்னன்படுகை அரசுப் பள்ளியில் நடந்த கட்டிட விபத்தில் மாணவர் ஒருவரின் கை துண்டிக்கப்பட்டது. இதனைக் கண்டித்து குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் பொதுமக்கள் பள்ளி முன்பு முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆண்டிபட்டி ஒன்றியம் மயிலாடும்பாறை அருகே உள்ள பொன்னன்படுகை கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இங்கு தெய்வேந்திரபுரம், கொங்கரவு, பள்ளத்தூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து 127 மாணவ, மாணவியர் கல்வி பயின்று வருகின்றனர்.
பள்ளி வளாகத்தின் சத்துணவிற்கான பயன்பாடில்லாத சமையல் அறை ஒன்று உள்ளது. கடந்த 17-ம் தேதி மாணவர்கள் சிலர் இப்பகுதியில் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக மேற்கூரை இடிந்து விழுந்தது. இதில்
இதில் 8ம்வகுப்பு மாணவர் செல்வக்குமார்(14), 6ம் வகுப்பு மாணவர் ஈஸ்வரன்(12) ஆகியோர்க்கு பலத்த காயம் ஏற்பட்டது. ஈஸ்வரன் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்குப் பிறகு செல்வக்குமார் தனியார் எலும்பு முறிவு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதில் எலும்புகள் வெகுவாய் சேதமடைந்ததால் வலதுகை அகற்றப்பட்டது.
இதனைத் தொடர்ந்து இன்று காலை (வியாழன் காலை) குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மறுத்து பள்ளி முன்பு பெற்றோரும், பொதுமக்களும் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் மாணவர்க்கான முழு மருத்துவச் செலவையும் அரசு ஏற்க வேண்டும். அவரது குடும்பத்தில் ஒருவர்க்கு அரசு வேலை அளிக்க வேண்டும். பள்ளி வளாகத்தில் பயன்பாடு இல்லாமல் உள்ள இன்னொரு கட்டடத்தையும் உடனடியாக இடிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
ஆண்டிபட்டி எம்எல்ஏ.மகாராஜன் நேரில் சென்று இப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார்.
மாவட்ட வருவாய் அலுவலர் ரமேஷ், தாசில்தார் சந்திரசேகர், வட்டார வளர்ச்சி அலுவலர் திருப்பதிவாசகன், தலைமையாசிரியை வேலுத்தாய் உட்பட பலரும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதற்கு பெற்றோர்களும், பொதுமக்களும் உடன்படவில்லை. எங்கள் கோரிக்கையை ஏற்று அரசு உத்தரவிட்டால்தான் கலைந்து செல்வோம் என்று தொடர்ந்து அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து பெற்றோர் கூறுகையில், பள்ளியில் பாதுகாப்பாக கல்வி பயில்வார்கள் என்றுதான் குழந்தைகளை அனுப்புகிறோம். இன்று ஒரு மாணவனின் கையை எடுக்கும் அளவிற்கு கல்வித்துறை அதிகாரிகள் மெத்தனமாக இருந்துள்ளனர். எங்கள் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும். அல்லது வரும் உள்ளாட்சித் தேர்தலை இப்பகுதியில் உள்ளவர்கள் ஒட்டுமொத்தமாக புறக்கணிப்போம் என்றனர்.