பிரதிநிதித்துவப் படம் 
க்ரைம்

பொள்ளாச்சியில் போலீஸ் எனக் கூறி ரூ.24 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகளைப் பறித்த மர்ம நபர்கள்

டி.ஜி.ரகுபதி

பொள்ளாச்சியில் போலீஸ் எனக் கூறி ரூ.24 லட்சம் மதிப்புள்ள தங்க நகையைப் பறித்துச் சென்ற மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவையை அடுத்த பொள்ளாச்சியைச் சேர்ந்தவர் சின்னையா (55). இவர் நகை வியாபாரி. வழக்கமாக கோவை செல்வபுரத்துக்கு வந்து அங்குள்ள பட்டறையில் தங்கக் கட்டியைக் கொடுத்து நகை செய்து வாங்கிச் செல்வார். நேற்று (டிச.18) இரவு, முன்னரே கொடுத்த தங்கத்தில் செய்யப்பட்ட ரூ.24 லட்சம் மதிப்புள்ள 650 கிராம் நகையை வாங்க சின்னையா கோவை வந்தார். 650 கிராம் நகையை வாங்கினார். பின்னர் ஆட்டோவில் உக்கடம் நோக்கிச் சென்று கொண்டிருந்தார்.

பெரியகடைவீதி - சித்தி விநாயகர் கோயில் சந்திப்பு அருகேயுள்ள அபாய மூக்கு அருகே சென்றபோது 2 பேர் ஆட்டோவை வழிமறித்துள்ளனர்.

தாங்கள் இருவரும் காவலர்கள், சாதாரண உடையில் இருப்பதாகக் கூறியுள்ளனர். சின்னையா மீது சந்தேகம் இருப்பதாகக் கூறி விசாரித்து, அவரிடம் இருந்த 650 கிராம் தங்க நகையைப் பறித்தனர். இதையடுத்து அருகிலுள்ள காவல் நிலையத்துக்கு வந்து விசாரணைக்குப் பின்னர் வாங்கிச் செல்லுமாறு கூறிவிட்டுச் சென்றனர்.

சின்னையா சென்று விசாரித்த போது, தங்க நகையைப் பறித்துச் சென்றது மோசடி நபர்கள் எனத் தெரியவந்தது. இதையடுத்து அவர் அளித்த புகாரின் பேரில் கடைவீதி குற்றப்பிரிவு போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT