க்ரைம்

பூக்கடை மற்றும் கீழ்பாக்கம் அருகில் ஒரு நம்பர் லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த 2 நபர்கள் கைது: ரூ.2,300/- மற்றும் துண்டு சீட்டுகள் பறிமுதல்

செய்திப்பிரிவு

தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் மற்றும் ஒரு நம்பர் லாட்டரி சீட்டுகளை விற்கும் நபர்களை கண்காணித்து கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையாளர் உத்தரவிட்டதன் பேரில், உதவி ஆணையர்களின் நேரடி மேற்பார்வையில், காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான தனிப்படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகளை கைது செய்து வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக பூக்கடை காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் நேற்று (14.12.2019) அப்பகுதியில் கண்காணிப்பு பணியிலிருந்தபோது, ஆய்வாளருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், பாரிமுனை, என்.எஸ்.சி.போஸ் சாலையில் ரகசியமாக கண்காணித்தபோது, அங்கு ஒருவர் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஒரு நம்பர் லாட்டரி சீட்டுகளை துண்டு காகிதத்தில் எழுதி கொடுத்து ரகசியமாக விற்பனை செய்து கொண்டிருந்தது தெரியவந்தது.

அதன்பேரில் , தடை செய்யப்பட்ட ஒரு நம்பர் லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து கொண்டிருந்த முகமது அசேன், முகமது காசிம், ஆகியோரைக் கைது செய்தனர். அவரிடமிருந்து பணம் ரூ.2,000/- மற்றும் துண்டு காகித சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

இதே போல, தலைமைச் செயலக குடியிருப்பு காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் நேற்று (14.12.2019) மதியம், புரசைவாக்கம் நெடுஞ்சாலை மற்றும் கெல்லீஸ் சந்திப்பு அருகே ரகசியமாக ஒரு நம்பர் லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து கொண்டிருந்தவரை கைது செய்தனர். அவரிடமிருந்து பணம் ரூ.300/- மற்றும் துண்டு காகித சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

கைது செய்யப்பட்ட 2 பேரும் விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.

SCROLL FOR NEXT