க்ரைம்

விருதுநகரில் ரூ.5 லட்சம் மதிப்பிலான குட்கா பறிமுதல்

இ.மணிகண்டன்

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் ரூ.5லட்சம் மதிப்பிலான குட்கா பொருட்கள் இன்று (சனிக்கிழமை) பறிமுதல் செய்யப்பட்டன.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி பகுதியில் குட்கா பொருட்கள் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்டு வருவதாக தனிப்படை போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. அதையடுத்து, தனிப்படை போலீஸார் நகரின் பல்வேறு பகுதிகளில் இன்று தீவிர சோதனை நடத்தினர்.

அப்போது, சிவகாசி கிழக்கு முனீஸ்வரன் காலனியில் உள்ள ஒரு வீட்டில் சட்ட விரோதமாக ஏராளமான குட்கா பொருள்கள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

அதையடுத்து குறிப்பிட்ட வீட்டில் சோதனை நடத்திய போலீஸார் அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.1.80 லட்சம் மதிப்பிலான குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக சிவகாசி கிழக்கு போலீஸார் வழக்குப் பதிந்து முத்துக்குமார் (45) என்பவரைக் கைதுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோன்று, சிவகாசி மார்க்கெட் பகுதியில் ஒரு கடையில் குட்கா பொருள்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததை அறிந்த போலீஸார் அங்கிருந்த சுமார் ரூ.3.11 லட்சம் மதிப்பிலான குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.

இதுதொடர்பாக சாட்சியாபுரம் காமராஜபுரம் காலனியைச் சேர்ந்த சாமுவேல் (46)என்பவரை சிவகாசி நகர் போலீஸார் கைதுசெய்தனர்.

SCROLL FOR NEXT