சென்னைக்கு கஞ்சா விற்பனை செய்ய வரவழைக்கப்பட்ட வடமாநில இளைஞர்கள் 6 பேர், விடுதியில் போலீஸார் நடத்திய சோதனையில் கஞ்சா பொட்டலங்களுடன் பிடிபட்டனர்.
கஞ்சா விற்பனை சென்னையில் கொடிகட்டிப் பறக்கிறது. தற்போது கஞ்சா விற்பனை செல்போன், வாட்ஸ் அப் மூலமாக டோர் டெலிவரி முறையிலும் நடக்கிறது. இதில் ஈடுபடும் பட்டதாரிகள், ஐடி ஊழியர்கள், கல்லூரி மாணவர்கள் கைதாகினர். சென்னையில் கஞ்சா விற்பனை செய்பர்களை போலீஸார் பிடித்து, கடுமையாக நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்றிரவு போலீஸார் மண்ணடி, ஐயப்ப செட்டி தெருவில் உள்ள அல் ரீப் ரெசிடென்சி என்ற லாட்ஜில் திடீர் சோதனை செய்தபோது 3-வது மாடியில் இரண்டு அறைகளில் 6 பேர் தங்கியிருந்தனர். அங்கு சோதனையிட்டதில் அவர்கள் ஏராளமான கஞ்சா பொட்டலங்களை வைத்திருந்தனர்.
சிறு சிறு பொட்டலங்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தன. அவற்றைக் கைப்பற்றிய போலீஸார் 6 பேரையும் கைது செய்தனர். அவர்கள் வைத்திருந்த 16 கஞ்சா பொட்டலங்களின் மொத்த எடை 1 கிலோ ஆகும்.
கைது செய்யப்பட்டவர்களிடம் போலீஸார் நடத்திய விசாரணையில் அவர்கள் ராயப்பேட்டை ஜாஃபர் உசேன் கான் தெருவைச் சேர்ந்த அன்வர் பாஷா (26), சிக்கந்தர் பாஷா (23), திரிபுராவைச் சேர்ந்த குர்ஷித் ஆலம் (22), அன்வர் ஹுசைன் (22), அஸ்ஸாமைச் சேர்ந்த ரபீகுல் இஸ்லாம் (24), ரஃபீக் மியா (23) ஆகியோர் ஆவர்.
விசாரணையில் அன்வர் பாஷா என்பவர் கடந்த 20 தினங்களுக்கு முன்பு அரக்கோணம் ரயில் நிலையத்தில் 8 கிலோ கஞ்சா வைத்திருந்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டு நேற்று காலை வெளியில் வந்து இரவு 11 மணி அளவில் அல்ரீப் லாட்ஜில் தங்கியுள்ளார்.
கடந்த 8-ம் தேதி இரவு 8 மணி அளவில் அல்ரீப் லாட்ஜில் அறை எண் 305, 307-ஐ ரசல் மியா மற்றும் சைபுன் என்பவர்கள் பெயரில் பதிவு செய்து தங்கியுள்ளனர். இவர்களுக்கு பெரம்பூரைச் சேர்ந்த ஜாவித் என்பவர் ஜாமீன் கொடுத்துள்ளார்.
இதில் அறை எடுத்துத் தங்கிய ரசல் மியா, சைபுன் ஆகியோர் தலைமறைவாகி விட்டனர். வடமாநில இளைஞர்களை வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரசல் மியா அஸ்ஸாமிலிருந்து சென்னை அழைத்து வந்துள்ளார். கைது செய்யப்பட்ட 6 பேரையும் சிறப்புப் படை போலீஸார் பூக்கடை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
பின்னர் அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். தப்பி ஓடிய ரசல் மியா, சைபுன் மற்றும் ஜாமீன் கொடுத்த பெரம்பூரைச் சேர்ந்த ஜாவித் ஆகியோரை போலீஸார் தேடி வருகின்றனர்.