க்ரைம்

திண்டுக்கல்லில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை: கடன் தொல்லை காரணமா என போலீஸ் விசாரணை

பி.டி.ரவிச்சந்திரன்

திண்டுக்கல்லில் கொடைரோடு ரயில் நிலையம் அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் (கணவன் மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள்) ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டனர்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு ரயில் நிலையத்தில் இருந்து சுமார் 150 மீட்டர் தொலைவில் மதுரையில் இருந்து திண்டுக்கல் மார்க்கமாக செல்லும் ரயில் தண்டவாளத்தில் 4 பேரின் சடலம் கிடந்த தகவல் போலீஸாருக்கு வந்தது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த கொடைரோடு ரயில்வே போலீஸார் ரயில்வே தண்டவாளத்தில் உடல்கள் சிதறி கிடந்த இடத்தில் ஆய்வு செய்தனர். பின்னர் சடலங்களை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

போலீஸார் சேகரித்த ஆதாரில், திருச்சி மாவட்டம் உறையூர், காவேரி நகர், நான்காவது குறுக்குத் தெருவைச் சேர்ந்த சேர்ந்த உத்திரபாரதி(49), சங்கீதா(42), அபினயஸீ (14), ஆகாஸ்(12) என்ற விவரங்கள் இருந்தன. இவர்கள் நால்வரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பது உறுதியானது.

எனினும் விபத்தால் உடல்கள் சிதறி முகம் சிதைந்துள்ளதால் ஆதார் கார்டில் உள்ளவர்கள் இவர்கள்தானா என்பதை உறுதி செய்ய இயலவில்லை.

இறந்தவர் ஒருவரின் பாக்கெட்டில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு திருச்சியில் இருந்து கொடைரோடு ரயில் நிலையத்திற்கு எடுக்கப்பட்ட ரயில் டிக்கெட்டுகள் மற்றும் கொடைரோட்டில் இருந்து கொடைக்கானலுக்கு சென்ற பஸ் டிக்கெட்டுகள இருந்தன.

இதனை காவல்துறையினர் கைப்பற்றி விசாரணை செய்து வருகின்றனர்.

குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்ட உத்திரபாரதி நண்பர்கள் மூன்று பேருடன் சேர்ந்து மருந்து வியாபாரம் செய்து வந்துள்ளார். தொழிலில் ஏற்பட்ட கடன் பிரச்சினை காரணமாக குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்டதாக முதற்கட்ட விசாரணையில் கூறப்படுகிறது.

இருப்பினும் உறவினர்கள், நண்பர்களிடம் விசாரணை மேற்கொண்ட பிறகே முழுவிவரம் தெரியவரும் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT