க்ரைம்

கோயிலில் கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி செல்போன் திருட்டு: டிப்டாப் பெண் கைது

செய்திப்பிரிவு

திருவான்மியூரில் உள்ள மருந்தீஸ்வரர் கோயிலில் கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி பக்தர் போர்வையில், பெண் பக்தர்களிடமிருந்து செல்போன்களைத் திருடிவந்த பெண் கைது செய்யப்பட்டார்.

சென்னை திருவான்மியூரில் மருந்தீஸ்வரர் கோயில் உள்ளது. இங்கு நேற்று கார்த்திகை தீபத்தை முன்னிட்டு ஏராளனமான பக்தர்கள் கோயிலுக்கு சாமி தரிசனத்துக்காக வந்திருந்தனர். மாலையில் பக்தர்கள் கூட்டம் அதிகம் காணப்பட்டது. இதே கோயிலில் அடிக்கடி பக்தர்களின் செல்போன் உள்ளிட்ட பொருட்கள் திருடப்படுவதாக ஏற்கெனவே புகார் அதிகம் வந்திருந்த நிலையில் போலீஸார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டு கண்காணித்து வந்தனர்.

இந்நிலையில் சாமி கும்பிட வந்தவர்களில் ஒரு பெண்ணின் நடை, உடை, பாவனை போலீஸாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. போலீஸார் அவரைக் கண்காணித்தபோது மற்றொரு பெண் பக்தரின் கைப்பையைத் திறக்க முயன்றதைப் பார்த்தனர். பெண் பக்தரின் கைப்பையைத் திறந்து செல்போனைத் திருடும்போது கையும் களவுமாக அப்பெண்ணை போலீஸார் பிடித்தனர்.

பின்னர் அவரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அவரது கைப்பையைச் சோதனையிட்டபோது ஐந்து உயர் ரக ஆண்ட்ராய்டு செல்போன்கள் இருந்தன. அவரிடம் போலீஸார் நடத்திய விசாரணையில் அவர் பெயர் பானு சர்மு (44) என்பதும் கல்பாக்கத்தைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது.

போலீஸார் விசாரணையில் இதேபோன்று கோயில் விழாக்கள், தேர்த் திருவிழாக்கள் போன்று பக்தர்கள் அதிகம் கூடும் இடங்களில் செல்போனைத் திருடிச் செல்வது வழக்கம் என்பது தெரியவந்தது. அவரைக் கைது செய்த போலீஸார் சைதாப்பேட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, புழல் சிறையில் அடைத்தனர்.

SCROLL FOR NEXT