மது போதையில் மொட்டை மாடியில் தூங்கிய டாஸ்மாக் பார் சமையல் மாஸ்டர் 4-வது மாடியிலிருந்து சாலையில் விழுந்து உயிரிழந்தார்.
சென்னை வடக்கு கடற்கரை காவல் நிலைய எல்லைக்குள் மண்ணடிக்கு அருகே அமைந்துள்ள ஜாபர் சாரங்கன் தெருவில் அரசு மதுபானக்கடை உள்ளது. இங்கு பக்கத்திலேயே கோவிந்தராஜ் என்பவருக்குச் சொந்தமான மதுபான பாரும் உள்ளது. இந்த பாரில் கடந்த ஒரு மாதமாக சமையல் மாஸ்டராக ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த பாபு (45) என்பவர் பணியாற்றி வந்தார்.
தினமும் இரவுப் பணி முடிந்த பின் மது அருந்திவிட்டு பார் கட்டிடம் அமைந்துள்ள பகுதியில் உள்ள மொட்டை மாடியில் தூங்குவது அவரது வழக்கம். நேற்றிரவும் வழக்கம்போல் மது அருந்திவிட்டு பார் கட்டிடத்தின் மொட்டை மாடியில் பாபு படுத்து உறங்கினார்.
நள்ளிரவு 1 மணி அளவில் மது போதையில் மாடியில் படுத்திருந்தவர் எதிர்பாராத விதமாக 4-வது மாடியிலிருந்து கீழே விழுந்தார். 4 மாடி உயரத்திலிருந்து விழுந்ததில் சம்பவ இடத்திலேயே பாபு உயிரிழந்தார்.
இதைப் பார்த்து அக்கம் பக்கம் உள்ள பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த வடக்கு கடற்கரை போலீஸார் பாபு உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பாபுவின் மரணம் குறித்து சந்தேக மரணம் பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.