க்ரைம்

அண்ணா சாலை மன்றோ சிலை அருகே இருசக்கர வாகனங்கள் மோதல்: இரும்பு வியாபாரி உயிரிழப்பு 

செய்திப்பிரிவு

அண்ணா சாலை மன்றோ சிலை அருகே இருசக்கர வாகனங்கள் மோதிக்கொண்டதில் வியாபாரி ஒருவர் பரிதாபமாக பலியானார். அவரை இடித்து விபத்தை ஏற்படுத்தியவர் தப்பி ஓடிவிட்டார்.

சென்னை அண்ணா சாலையிலிருந்து பாரிமுனை நோக்கி செல்லும் வழியில் தீவுத்திடல் அருகே மன்றோ சிலை உள்ளது. நேற்றிரவு 10 மணி அளவில் இவ்வழியாக மண்ணடி வன்னியர் தெருவில் வசிக்கும் இரும்பு வியாபாரி யூசுப்(57) என்பவர் தனது இருசக்கர வாகனத்தில் அண்ணா சாலையிலிருந்து மண்ணடி நோக்கிச் சென்றுள்ளார்.

அப்போது எதிரில் இருசக்கர வாகனத்தில் குறுக்கே திடீரென புகுந்த ஒருவர் யூசுப் மீது மோதியதில் அவருக்கு இடதுகண் புருவம், பின் தலை மற்றும் முகத்தில் கடுமையான காயம் ஏற்பட்டது. கீழே விழுந்துக்கிடந்த அவரை அவ்வழியாக வந்த வாகன ஓட்டிகள் மீட்டு ராஜிவ் காந்தி அரசு பொதுமருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனிடையே இருசக்கர வாகனத்தை ஓட்டிவந்து விபத்தை ஏற்படுத்திய நபர் வாகனத்தை அங்கேயே விட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டார். அண்ணா சதுக்கம் போக்குவரத்து புலனாய்வு போலீஸார் 279(ஒருவர் உயிருக்கு ஆபத்து ஏற்படும் விதத்தில் அஜாக்கிரதையாக வாகனம் ஓட்டுதல்) 338( உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் விதத்தில் அஜாக்கிரதையாகவும், அசட்டுத்துணிச்சலுடனும் வாகனத்தை ஓட்டி விபத்தை ஏற்படுத்தி படுகாயமுண்டாக்குதல்) 134 a&B 411 r/w 187 mv Act ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு தொடர்ந்து தப்பி ஓடிய நபரை தேடி வந்தனர்.

இந்நிலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட யூசுப் சிகிச்சை பலனின்றி நள்ளிரவில் உயிரிழந்ததை அடுத்து வழக்கில் 304(எ) (அஜாக்கிரதையாக இருந்து உயிரிழப்பை ஏற்படுத்துதல்) பிரிவு கூடுதலாக போடப்பட்டது.

SCROLL FOR NEXT