கல்லூரியில் படிக்கும் காலத்தில் மகிழ்ச்சியாக படிக்கணும், சந்தோஷமான தருணம் இது ஆனால் உங்கள் நண்பர்களை தேர்வு செய்வதில் கவனமாக இருக்கணும். படிப்பு தான் மிக முக்கியம் என ராணி மேரிக்கல்லூரி விழாவில் காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் பேசினார்.
சென்னை காவல் ஆணையராக ஏ.கே.விஸ்வநாதன் பதவியேற்றதற்கு பின்னர் பொதுமக்களிடம் காவலர்கள் நெருங்கி வருவது, காவல் உயர் அதிகாரிகள் பொதுமக்களோடு நெருங்கி பழகும் நிகழ்வுகள் அதிகரித்து வருகிறது.
சென்னையில் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க பல்வேறு திட்டங்களை கொண்டுவந்த முன்னோடியாக காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் விளங்குகிறார். பொதுமக்கள் பாதுகாப்புக்காக சென்னை முழுதும் கண்காணிப்புக்கேமராவை நிறுவியதன்மூலம் பெரிய அளவில் விழிப்புணர்வும் குற்றச்செயல்கள் குறைந்துள்ளதும் நடந்துள்ளது.
அதே போன்று குற்றச்செயல்களை தடுப்பது, நல்ல குடிமகனாக நடந்துக்கொள்ப்பவர்களை நேரில் அழைத்து பாராட்டும் நடவடிக்கை மூலம் அடுத்தவர்களும் தாமும் நல்லது செய்தால் பாராட்டப்படுவோம் என்கிற எண்ணத்தை காவல் ஆணையர் விதைத்து வருகிறார்.
பேஸ்டாக்கர், காவலன் செயலி பொதுமக்கள் குறிப்பாக பெண்கள் பாதுகாப்புக்கு மிகச்சிறப்பான ஒரு செயலியாக விளங்கிவருகிறது. தற்போது அதை தனது தனித்துவமான பிரச்சாரம் மூலம் ஒவ்வொரு கல்லூரி மாணவிகள், இளம்பெண்கள், இல்லத்தரசிகளிடம் கொண்டுச்சேர்த்துள்ளார். கல்லூரிகளுக்கு தொடர்ச்சியாக செல்லும் காவல் ஆணையர் இன்று ராணிமேரிக்கல்லூரியில் காவலன் செயலியை அறிமுகப்படுத்தி பேசினார்.
காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசுகையில், “ காவலன் செயலி கடந்த ஆண்டு தமிழக முதல்வரால் தொடங்கி வைக்கப்பட்டது. மிகச்சிறந்த செயலியாகும்.
பெண்களுக்கு அவசர காலங்களில் உதவும் வகையில் ‘காவலன் செயலி’ உள்ளது. ஆபத்து காலம் என்பது யாருக்கும் எந்த சூழ்நிலையிலும் ஏற்பட வாய்ப்புள்ளது. காவலன் செயலியை அனைவரும் பதிவிறக்கம் செய்து வைத்துக்கொண்டால் ஆபத்துக் காலங்களில் பயன்படும்.
இந்தியாவிலேயே பெண்களுக்கு பாதுகாப்பான பெருநகரங்களில் சென்னை முதலிடத்தில் உள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக குறைவான குற்றங்கள் மற்றும் வழக்குகள் பதிவாகியுள்ள நகரங்களில் சென்னை 18-வது இடத்தையும், கோவை 19-வது இடத்தையும் பெற்றுள்ளன.
இணையதள வசதி இல்லை என்றாலும், காவலன் செயலி செயல்படும். ஆபத்து நேரத்தில் உங்களால் போனில் டயல் செய்ய முடியும் என்றால் காவல் கட்டுப்பாட்டு அறை எண் 100-க்கும் தொடர்பு கொள்ளலாம். இந்த இரு முறைகளிலும் உங்களுக்கு உடனடி போலீஸ் உதவி கிடைக்கும்.
கொள்ளையர்களால் தாக்கப்பட்ட ஐடி பெண் ஊழியர் லாவண்யாவை நேரில் சந்தித்தபோது, ‘நான் போலீஸாருக்கு தகவல் கொடுத்த 2 நிமிடத்தில் போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்துவிட்டனர்’ என்றார்.
மேலும், எந்தெந்த இடங்களில் நீங்கள் பாதுகாப்பு இல்லாமல் உணர்கிறீர்கள், குறிப்பிட்ட சில நபர்களால் பாதுகாப்பு இல்லாமல் உணர்ந்தாலும் நீங்கள் எங்களிடம் தெரிவிக்கலாம். பெண்கள் போலீஸாரை மேலும் எளிதாக தொடர்பு கொள்ளும் வகையில் ‘வாட்ஸ்அப்’ எண்கள் வெளியிடுவது உட்பட சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
அதேப்போன்று இணைய தளத்தை கையாளுவதில் நீங்கள் தெளிவாக கவனமாக இருக்கவேண்டும். நீங்கள் யாரும் உங்களை கவனிக்கவில்லை என்று நினைத்து இணையத்தில் உலாவ முடியாது. ஆகவே ஆபத்து எங்கிருந்து வேண்டுமானாலும் வரலாம். தெரியாத நபர்களிடம் தொடர்பு வைத்துக்கொள்ளக்கூடாது.
உங்கள் நண்பர்கள் யார் என்பதை தீர ஆராய்ந்து தேர்வு செய்யணும், கண்ணால் காண்பதும் பொய் காதால் கேட்பதும் பொய் தீர ஆராய்வதே நல்லது என்பது இந்த காலத்திலும் பொருந்தும். ஆகவே இணையதளத்தில் மூழ்கி கிடப்பதும் அதற்கு அடிக்ட் ஆவதும் ஆபத்தானது. படிக்கிற காலத்தில் சந்தோஷமாக படிக்கவேண்டும், மகிழ்ச்சியாக இருக்கவேண்டும். அதே நேரம் வாழ்க்கை முன்னேற்றத்திற்கு படிப்புத்தான் முக்கியம் அதை மறக்கக்கூடாது, நல்ல நண்பர்களை தேர்வு செய்வதும் முக்கியம்”. என்று பேசினார்.
செய்தியாளர்களிடம் பேசும்போது தொடர் பிரச்சாரம் காரணமாக காவலன் செயலியை கடந்த 2 நாட்களுக்கு முன்வரை ஒரு லட்சம் பேர்வரை பதிவிறக்கம் செய்துள்ளனர். தினமும் 20 ஆயிரம் முதல் 30 ஆயிரம் பேர்வரை பதிவிறக்கம் செய்கிறார்கள் என்று தெரிவித்தார்.