சென்னையில் கணவருடன் ஏற்பட்ட வாய்த்தகராறில் கொதிக்கும் எண்ணெயை கணவர் மீது ஊற்றியதால் தீக்காயம் ஏற்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த கணவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
சென்னை திருவிக நகர், மூன்றாவது தெருவில் வசித்தவர் உபயதுல்லா(42). இவரது மனைவி நஸ்ரின்(38). கணவன் மனைவி இருவருக்கும் சமீப காலமாக மனத்தாங்கல் இருந்து வந்துள்ளது. இருவருக்கும் அடிக்கடி வாக்கு வாதம் ஏற்பட்டு வந்துள்ளது. கடந்த 2- ம் தேதியன்று கணவன் மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதில் ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த நஸ்ரின் கடாயில் கொதித்துக்கொண்டிருந்த எண்ணெயை கணவர் இதயத்துல்லா மீது ஊற்றியதாக கூறப்படுகிறது. இதில் உடல் முழுதும் வெந்துபோய் இதயத்துல்லா அலறியுள்ளார். அக்கம் பக்கத்தினர் இதயத்துல்லாவை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு பொது மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
கடந்த 5 நாட்களாக தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த உபயதுல்லா சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். இந்தச் சம்பவம் தொடர்பாக மனைவி நஸ்ரினை திருவிக நகர் போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.