போலீஸ் போல் நடித்து பெண்ணைக் கடத்த முயன்ற 3 பெண்களை போலீஸார் கைது செய்தனர். காரில் கடத்த முயன்றபோது பொதுமக்கள் மடக்கிப் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர்.
சென்னை வேளச்சேரி , வெங்கடேஷ்வரா நகரில் வசிப்பவர் சுபாஷினி (47). இவர் மாம்பலம் ரயில் நிலையத்தில் புக்கிங் கிளர்க்காகப் பணியாற்றுகிறார். தினமும் மாம்பலம் ரயில் நிலையத்திலிருந்து கிண்டி ரயில் நிலையம் வந்து அங்கிருந்து வேளச்சேரியில் உள்ள தனது வீட்டிற்குச் செல்வது வழக்கம்.
இந்நிலையில் வழக்கம்போல் சுபாஷினி தனது பணியை முடித்துக் கொண்டு மாம்பலம் ரயில் நிலையத்திலிருந்து கிண்டி ரயில் நிலையம் வரை ரயிலில் தனது கைபேசியில் கணவரிடம் உரையாடிக்கொண்டே ரயில்வே நடைமேடையில் நடந்து வந்துள்ளார்.
அப்பொழுது, அவருக்குப் பின்னால் வந்த இரண்டு பெண்கள் தாங்கள் காவலர்கள் என்றும், அவரைக் கைது செய்ய வந்துள்ளதாகவும் கூறி அருகில் நின்றிருந்த காரில் ஏற்ற முயன்றனர். இதனால் சுபாஷினி சத்தம் போட்டார். காருக்குள் இன்ஸ்பெக்டர் உடையில் இருந்த ஒரு பெண் அவரை இழுக்க முயன்றார். சுபாஷினியின் சத்தம் கேட்டு அக்கம் பக்கம் உள்ளவர்களும் ரயில்வே போலீஸாரும் அங்கு ஓடி வந்தனர்.
இதைப் பார்த்து காரில் இருந்த 3 பெண்களும் ஓடிவிட்டனர். கார் ஓட்டுநர் மட்டும் சிக்கினார். அவரை கிண்டி போலீஸ் வசம் ஒப்படைத்தனர்.
போலீஸ் விசாரணையில், ''எனக்கொன்றும் தெரியாது நான் கால் டாக்ஸி ஓட்டுநர். அவர்கள் கார் புக் செய்தார்கள், வரும் வழியில் போலீஸ் இன்ஸ்பெக்டர் எஸ்.ஐ.எனக் கூறினர். ஒருவர் இன்ஸ்பெக்டர் உடையில் இருந்தார். இங்கு அந்தப் பெண்ணை வலுக்கட்டாயமாக காரில் ஏற்ற முயன்றனர். அப்போது சத்தம் போட்டதால் அவர்கள் ஓடிவிட்டனர். போலீஸ் அதிகாரிகளே ஓடுகிறார்களே என்று எனக்கு அப்போதுதான் சந்தேகம் ஏற்பட்டது’’ என்று ஓட்டுநர் கூறியுள்ளார்.
அவர் கொடுத்த தகவலின் பேரில் வியாசர்பாடியைச் சேர்ந்த வதனி என்பவர் சிக்கினார். வதனி , ''ராயபுரத்தைச் சேர்ந்த ரயில்வே ஊழியர் ஒருவருக்கும் எனக்கும் கூடா நட்பு இருந்தது. இதில் சுபாஷினிக்குத் தொடர்பு இருப்பதாக சந்தேகம் வந்ததால் அவரை மிரட்டுவதற்காக போலீஸ் போல் நடித்துக் கடத்த நினைத்தேன்.
அதற்காக என் தோழிகள் தமிழ்ச்செல்வி (38), முத்துலட்சுமி (37) ஆகிய இருவர் உதவியையும் நாடினேன். முத்துலட்சுமி பெண் போலீஸ் இன்ஸ்பெக்டராக நடிக்க, நாங்கள் எஸ்.ஐ., போலீஸ் போல் நடித்துக் கடத்த நினைத்தோம். ஆனால் சுபாஷினி சத்தம் போட்டதால் தப்பி ஓடிவிட்டோம்'' என்று விசாரணையில் தெரிவித்துள்ளார்.
மூவரையும் கைது செய்த போலீஸார் உடன் வந்த கார் ஓட்டுநரை விடுவித்தனர்.