சென்னை முன்னாள் ஆணையரும், தற்போது ஜம்மு காஷ்மீர் ஆளுநரின் ஆலோசகருமான தமிழக ஐபிஎஸ் அதிகாரி (ஓய்வு) கே.விஜயகுமார், உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஐபிஎஸ் அதிகாரிகளில் மிகப் பிரபலமான அதிகாரியாகவும், பொதுமக்களால் அதிகம் விரும்பப்பட்டவராகவும் விளங்கியவர் விஜயகுமார். சென்னை காவல் ஆணையராக அவர் இருந்தபோது அவரது செயல்முறைகள் மூலம் ரவுடிகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கினார். அவருக்குக் கீழ் இரண்டு அதிகாரிகள் இரண்டு இணை ஆணையர்களாகப் பணியாற்றினர். அவர்கள்தான் தற்போது தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபியாகப் பணியாற்றும் திரிபாதி மற்றும் ரயில்வே டிஜிபி சைலேந்திர பாபு ஆகியோர்.
விஜயகுமார் ஐபிஎஸ் இன்று மத்திய உள்துறை அமைச்சரின் ஆலோசகராக நியமிக்கப்பட்டது சாதாரண நிகழ்வல்ல. அதன் பின்னர் அவர் காவல் பணியை நேசித்ததும் சிறந்த காவல் அதிகாரியாக இருந்ததும், தனது பணியில் சக மனிதர்களை மதித்ததும் முக்கியக் காரணங்கள். ஐஏஎஸ் அதிகாரியாகத் தேர்வானாலும், தனக்கு விருப்பம் ஐபிஎஸ் பணி என்பதால் ஐபிஎஸ் பதவியைக் கேட்டு வாங்கி வந்தார் விஜயகுமார்.
யார் இந்த விஜயகுமார்?
கேரளாவில் உள்ள இடுக்கி மாவட்டத்தில் கிருஷ்ணன் நாயர் -கௌசல்யா தம்பதிக்கு மகனாக 1952-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15-ம் தேதி பிறந்தார் விஜயகுமார். அவரது தந்தையும் ஒரு போலீஸ் அதிகாரிதான். சிறு வயதிலிருந்தே காவல் அதிகாரி, அதுவும் ஐபிஎஸ் அதிகாரியாக வேண்டும் என்று லட்சியத்துடன் செயல்பட்டவர் விஜயகுமார்.
ஆரம்பக் கல்வியை கேரளாவில் முடித்த அவர் பட்டப்படிப்பை சென்னைப் பல்கலைக்கழகத்தில் முடித்தார். முதுகலை சட்டப்படிப்பை முடித்த பின் சிவில் சர்வீஸ் தேர்வெழுதினார். ஐஏஎஸ் அதிகாரியாகத் தேர்வு செய்யப்படும் அளவுக்கு மதிப்பெண் பெற்றாலும் ஐபிஎஸ்தான் தனது கனவு என்று ஐபிஎஸ் துறையைக் கேட்டுப் பெற்றார். தமிழக கேடராக 1975-ம் ஆண்டு பட்டுக்கோட்டை ஏஎஸ்பி ஆக நியமிக்கப்பட்டார்.
பின்னர் திருச்சி அதன்பின் செம்பியம் ஏஎஸ்பியாகப் பணியாற்றினார். 1977-ல் அவருக்குத் திருமணமானது. மீனா அவரது மனைவி பெயர். அவர்களுக்கு அர்ஜுன் குமார் , அஷ்வினி என ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். 1975-ம் ஆண்டு முதல் 1982-ம் ஆண்டு வரை ஏஎஸ்பியாகப் பதவி வகித்த அவர் 1982-ம் ஆண்டு எஸ்.பி-யாகப் பதவி உயர்வு பெற்று ஓராண்டு தருமபுரியிலும்,1983-ம் ஆண்டு சேலத்திலும் பணியாற்றினார்.
அப்போது பிரபல காவல்துறை அதிகாரி வால்டர் தேவாரத்தின் வழிகாட்டுதல் அவருக்கு மிக உபயோகமாக இருந்தது.
1985-ம் ஆண்டு அயல் பணியாக அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தியின் பாதுகாப்புக்காக உருவாக்கப்பட்ட சிறப்புப் பாதுகாப்புப் பிரிவுக்கு (NSG) மாற்றப்பட்டு 5 ஆண்டுகள் சிறப்பாகப் பணியாற்றினார். பின்னர் 1990-க்குப் பின் தமிழகம் திரும்பிய அவர் திண்டுக்கல் எஸ்பியாகவும், பின்னர் வேலூர் எஸ்பியாகவும் பணியாற்றினார்.
பின்னர் 1991-ல் தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா தனக்கான ஒரு பாதுகாப்புப் பிரிவாக விஜயகுமார் தலைமையில் எஸ்எஸ்ஜி (SSG) சிறப்புப் பாதுகாப்புப் பிரிவு ஒன்றை உருவாக்கினார். இந்தக் காலகட்டத்தில் டிஐஜியாகப் பதவி உயர்வு பெற்றார். அதன் பின்னர் ஐஜியாகப் பதவி உயர்வு பெற்ற அவர் 1997-ல் முதன்முறையாக உருவாக்கப்பட்ட தெற்கு மண்டல ஐஜியானார்.
பின்னர் 1998-ல் மீண்டும் அயல் பணியாக எல்லைப் பாதுகாப்புப் படை ஐஜியாகச் சென்றார். பின்னர் செயலாக்கப் பிரிவு ஐஜியாகப் பணியாற்றினார். 2001-ல் ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா அவரை வீரப்பன் வேட்டைக்காகத் தமிழகத்துக்கு அழைத்து வந்தார், அதில் சில காலம் பணியாற்றிய அவர் 2001-ம் ஆண்டு சென்னை காவல் ஆணையராக நியமிக்கப்பட்டார் .
சென்னை காவல் ஆணையர்களில் இதுவரை விஜயகுமார் போல் பிரபலமானவர்கள் யாரும் இல்லை. அதன் பின்னர் தற்போது காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் காவல் ஆணையராக மக்கள் மனதில் வேரூன்றியுள்ளார். காவல் ஆணையராக விஜயகுமார் பணியாற்றிய காலகட்டத்தில் ரவுடிகள் கடுமையாக ஒடுக்கப்பட்டனர். பல என்கவுன்ட்டர்கள் நடத்தப்பட்டன.
அதில் முக்கியமானது தாதா வீரமணி என்கவுன்ட்டர் ஆகும். அதன் பின்னர் 2004-ம் ஆண்டு வீரப்பன் வேட்டைக்காக சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டார். யாராலும் பிடிக்க முடியாத வீரப்பனைப் பிடித்தார். அதன் பின்னர் 2008-ம் ஆண்டு தமிழக சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபியாக நியமிக்கப்பட்டார்.
அதன் பின்னர் அயல் பணியாக ஹைதராபாத்தில் அமைந்துள்ள ஐபிஎஸ் அதிகாரிகள் பயிற்சி கல்லூரிக்குத் தலைவராக நியமிக்கப்பட்டார். பின்னர் டிஜிபியாகப் பதவி உயர்வு பெற்று சிஆர்பிஎஃப் பிரிவுக்குச் சென்றார். 2012-ம் ஆண்டு காவல் துறையிலிருந்து ஓய்வு பெற்றார். ஓய்வுக்குப் பின்னும் அவரை மத்திய அரசு மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஆலோசகராக நியமித்தது. 2018-ம் ஆண்டு ஜம்மு காஷ்மீர் ஆளுநரின் ஆலோசகராக நியமிக்கப்பட்டார்.
தற்போது 67 வயதாகும் விஜயகுமார் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஜம்மு காஷ்மீர் மற்றும் நக்சல்வாதிகள் இருக்கும் பகுதிகளுக்கான பாதுகாப்பு ஆலோகராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்தப் பதவியில் அவர் ஓராண்டு இருப்பார் என உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
தமிழக ஐபிஎஸ் கேடர் அதிகாரி காவல் துறையை நிர்வகிக்கும் மத்திய உள்துறை அமைச்சரின் ஆலோசகராக நியமிக்கப்பட்டதன் மூலம் தமிழக காவல் துறையிலும் முக்கியப் பொறுப்புகளுக்குரிய அதிகாரிகள் நியமனத்தில் விஜயகுமாரின் ஆலோசனை கண்டிப்பாக கேட்கப்படும் என ஐபிஎஸ் அதிகாரிகள் வட்டாரத்தில் பேசப்படுகிறது.