"எங்கள் சாவுக்கு வறுமையே காரணம்.." என வீட்டுச் சுவரில் எழுதிவைத்துவிட்டு தென்காசியை அடுத்த புளியரை அருகே இளைஞர் ஒருவர் தனது இரண்டு குழந்தைகளுக்கும் விஷம் கொடுத்துவிட்டு மனைவியுடன் தற்கொலை செய்து கொண்டார்.
தென்காசி மாவட்டம் செங்கோட்டயை அடுத்த புளியரை அருகே உள்ளது கட்டளை குடியிருப்பு. இப்பகுதியைச் சேர்ந்த கந்தசாமி (37) ஆட்டோ ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி இசக்கியம்மாள் என்ற இந்துமதி (30). இவர்கள் இருவரும் கடன் தொல்லையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
அவர்களின் குழந்தை சின்னமுத்திரன் (5) மற்றும் 2 வயது குழந்தைக்கும் விஷம் கொடுத்து உள்ளனர். இதில் சின்னமுத்திரன் இறந்துவிட 2 வயது குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து புளியரை போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
முதற்கட்ட விசாரணையில் கடன் தொல்லையால் இச்சம்பவம் நடந்திருப்பதாக போலீஸார் தெரிவிக்கின்றனர். கட்டளை குடியிருப்புப் பகுதியில் சிறு கடன் நிறுவனங்களால் வழங்கப்படும் கந்து வட்டி கடனால் பல்வேறு குடும்பங்களும் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இது குறித்தும் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.